ETV Bharat / state

நெல்லை அருகே வம்பிழுத்த காமெடி நடிகர்: கார் கண்ணாடி உடைப்பு

author img

By

Published : Jun 14, 2022, 8:40 PM IST

கார் கண்ணாடி உடைப்பு
கார் கண்ணாடி உடைப்பு

நெல்லை அருகே கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வம்பிழுத்த திரைப்பட காமெடி நடிகர் ராஜேந்திரநாத் காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலி: முக்கூடலில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்திபெற்ற முத்துமாலை அம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. மேலும் இக்கோயிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனித்திருவிழாவின் போது ஒருநாள் கலை நிகழ்ச்சி, பிரபல நடிகர் ராஜேந்திரநாத்தால் நடத்தப்பட்டது. அப்போது கலை நிகழ்ச்சியை அரசியல் மேடையாக மாற்றியதாக கூறி இப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அப்போது நடிகர் ராஜேந்திரநாத்திற்கு முதல் மரியாதை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து நடிகர் ராஜேந்திரநாத் கோயிலில் உண்டியல் மேல் உண்டியல் வைத்து வசூல் செய்தல், அர்ச்சனை சீட்டு என பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக இப்பகுதியை சேர்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தார்.

இந்த நிலையில் நடிகர் ராஜேந்திரநாத் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயிலுக்கு இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அங்கு வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதி இளைஞர்களிடம் அனுமதி பெற்று இந்த பணியை மேற்கொள்கிறீர்களா, எனக்கூறி தனது செல்போனில் கோயிலை சுற்றி வீடியோ எடுத்தவாறே சென்றார். அப்போது அவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து குடும்பத்துடன் கிளம்பிய நடிகர் ராஜேந்திரநாத் முக்கூடல் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, அவரை அவதூறு வார்த்தைகளால் பேசியதாக புகார் அளித்துவிட்டு, நெல்லை நோக்கி கிளம்பினார். இதற்கிடையில் முக்கூடல் கோயிலில் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் நடிகர் ராஜேந்திரநாத் தங்களை அவதூறு வார்த்தைகளால் பேசியதாக அவர் மீது புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இருதரப்பு புகார் மனுக்களையும் பெற்றுக் கொண்ட முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நெல்லை நோக்கி சென்ற நடிகர் ராஜேந்திரநாத் காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்தும் முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் ரயில்வே பணிகளையும் வடமாநிலத்தவர்கள் கைப்பற்றக்காரணம் என்ன? விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.