ETV Bharat / state

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு; 3 நாட்களில் 45,430 ஆசிரியர்கள் விண்ணப்பம்! - Teacher Transfer Consultation

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 10:51 PM IST

Teacher Transfer Consultation: ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில், 3 நாட்களில் 45 ஆயிரத்து 430 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிக் கல்வி இயக்ககம் புகைப்படம்
பள்ளிக் கல்வி இயக்ககம் புகைப்படம் (credit to ETV Bharat Tamil Nadu)

சென்னை: பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கேட்டு, 3 நாட்களில் 45 ஆயிரத்து 430 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு மே 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள், தங்களது EMIS - ID மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும், பள்ளிக்கல்வி இயக்ககம் சார்ந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், நிலுவையின்றி உடனடியாக கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும் எனவும், அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும். எனவே, எவ்வித விடுதலுமின்றி மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து, உரிய அலுவலர்களால் நாள்தோறும் நிலுவையில்லாமல் ஏற்பளித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும் தொடக்கக் கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்கள் 9 ஆயிரத்து 613 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 208 பேரும், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்கள் 2 ஆயிரத்து 745 பேரும், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 463 பேரும் என 18 ஆயிரத்து 29 ஆசிரியர்களால் விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 14 ஆயிரத்து 854 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 10 ஆயிரத்து 751 பேரும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 659 பேரும், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 621 பேரும், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் 516 பேரும் என 27 ஆயிரத்து 401 ஆசிரியர்களால் விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

மேலும், தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் 5,500, பட்டதாரி ஆசிரியர்கள் 1,100, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் 1,200, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 715‌ என மொத்தம் 8,515 காலிப் பணியிடங்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் சுமார் 5,000 காலிப் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் உள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வில் 200க்கு 113 கேள்விகள் அரசு நடத்திய பயிற்சி தேர்வில் கேட்டகப்பட்டவை - ஆசிரியர்கள் பெருமிதம்! - NEET EXAM RESULT 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.