ETV Bharat / business

அட்சய திருதியை தங்கம் வாங்கவா? தானம் செய்யவா? புரிதல் என்ன? - akshaya tritiya 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 7:57 PM IST

ஆண்டுதோறும் அட்சய திருதியை நாள் வருகிறது, தங்கம் வாங்கி மகிழ்கிறோம்.. ஆனால் இந்த புனிதமான நாள் உணர்த்தும் உண்மையான விளக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

அட்சய திருதியை 2024
அட்சய திருதியை 2024 (Credit : Getty Image)

சென்னை: அட்சய திருதியை தங்கம் வாங்குவதற்கான ஒரு நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பல நூற்றாண்டுகளாக மக்கள் மனதில் இருக்கிறது. ஆனால் இந்த நாள் தங்கம் வாங்குவதற்கு மட்டும்தானா என கேட்டால் அது கிடையாது என்றே புராணங்கள் வெளிப்படுத்தும் கூற்றுக்கள் உணர்த்துகின்றன. இந்த நாளில் சில மத வரலாற்று நிகழ்வுகள் நடந்ததாக கூறப்படுகிறது.

அதில் மிக முக்கியமானது சிவபெருமான் பிச்சைகாரர் வேடத்தில் வந்து அன்னபூரணியிடம் தனது பிச்சை பாத்திரத்தில் உணவு வாங்கி சென்ற நாள் என கூறப்படுகிறது. அதேபோல, அந்த வகையில் உலகத்தில் உள்ள மக்களின் பசி பிணி தீர அன்னத்தை தானம் செய்வதை விட பெரிய செயல் எதுவும் இல்லை என்றே இந்த நாள் உணர்த்துகிறது என முன்னோர்கள் கூறுகின்றனர்.

அட்சய திருதியை நாளில் அரிசி, உப்பு, தண்ணீர் உள்ளிட்டவைகளை தானமாக வழங்குவார்கள். தானம் என்றும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும், குறைவில்லாமல் கொடுப்பதே நிறைவோடு வாழ உகந்த செயல் என்பதே இந்த அட்சய திருதியை சொல்லும் கருத்தாக பார்க்கப்படுகிறது.

அதெல்லாம் சரி இந்த நாளில் தங்கம் ஏன் வாங்க வேண்டும்? வளர்பிறை மூன்றாம் நாளில் வரும் இந்த அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் பிறைபோல் அதுவும் வளர்ந்துகொண்டே போகும் எனவும் நம்பப்படுகிறது.

ஆனால் முன்னோர்கள் பலர் தங்கத்தை வாங்கி அதை இந்த நாளில் தானம் செய்திருக்கிறார்கள். இன்று தங்கம் விற்கும் விலைக்கு தங்கம் தானம் செய்யும் நிலையில் இல்லாத மக்கள் பலர் அரிசி, உப்பு, தண்ணீர், உணவு, ஆடை உள்ளிட்ட மனிதனின் அடிப்படை தேவைகளாக இருப்பவற்றை தானம் செய்கின்றனர்.

வணிக ரிதியாக இந்த நாள் தங்கம் விற்பனையாளர்களின் தங்கமான நாள் என்றே கூறலாம். சாதாரணமான நாட்களில் விற்கப்படும் தங்கத்தை விட அட்சய திருதியை நாட்களில் இந்தியாவில் தங்கம் விற்பனை களைகட்டும். மக்களின் நம்பிக்கைக்காக வணிகர்களும் பல்வேறு வடிவங்களில் சலுகைகளை கூறி வாடிக்கையாளர்களை கவர்கின்றனர். ஆனால் இயற்கையாகவே அட்சய திரிதியை நாளில் தேவை அதிகரிப்பதால், விலையும் அதிகரிக்கிறது.

இதனால் அட்சய திருதியை நாட்களில் அந்த வாரத்தின் ஆரம்பத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரிக்கத் துவங்கும். இருந்தாலும் மக்கள் தங்கம் வாங்குவதில் காண்பிக்கும் ஆர்வத்திற்கு எவ்வித குறைச்சலும் இருக்காது என்றே முந்தைய ஆண்டுகளில் விற்பனையான அட்சய திருதியை தங்கம் விற்பனை நிலவரங்கள் கூறுகின்றன. அந்த நாளில் பல ஆயிரம் கோடிகளுக்கு தங்கம் விற்பனையாகும் நிலையில், தமிழ் நாட்டு மக்கள் தான் இதில் அதீத ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் கடந்த கால தகவல்கள் கூறுகின்றன.

அட்சய திருதியை 2024 தங்கம் வாங்க உகந்த நேரம் எதுவோ அதுவே தானம் செய்யவும் உகந்த நேரம் என, இறை நம்பிக்கையாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு நாளை (10.05.2024) மற்றும் நாளை மறுநாள் (11.05.2024) ஆகிய இரு தினமும் காலை 5.33 முதல் மதியம் 12.18 வரை இந்த செயல்களை மேற்கொள்ளலாம் எனக்கூறப்படுகிறது.

அதேபோல, கணவன் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யும் மனைவிகள் லட்சுமி தேவிக்கு பூஜை செய்து குங்குமத்தை இந்த நாளில் தானமாக வழங்கும் நம்பிக்கையும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனவே அட்சய திருதியை என்பது தங்கம் வாங்கி வீட்டில் சேமிப்பதற்கு மட்டும் அல்ல தானம் வழங்கி புண்ணியத்தை சம்பாதிப்பதற்கே என கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இந்திய பொருளாதாரத்தில் நுகர்வோர் பங்களிப்பு என்ன? நுகர்வு நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டிய காரணம் என்ன? - Indian Economy 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.