ETV Bharat / state

தமிழ்நாட்டின் ரயில்வே பணிகளையும் வடமாநிலத்தவர்கள் கைப்பற்றக்காரணம் என்ன? விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்

author img

By

Published : Jun 14, 2022, 8:01 PM IST

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே

இந்தியன் ரயில்வேயில் உள்ள பணிகளில் வடமாநில இளைஞர்கள் அதிகம் வெல்வதற்கும், தமிழ்நாடு இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கும் உள்ள நிலைமையை தமிழ்நாடு முழுவதும் சென்று அரசு ஐடிஐ நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்குத் தனது தொடர் பரப்புரையின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், இளைஞர் பாண்டுரங்கன். அந்த பொதுநல இளைஞரின் நோக்கம் குறித்த ஓர் சிறப்புக்கட்டுரை!

மதுரை: உலகத்திலேயே அதிக தொழிலாளர்கள் பணியாற்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசு நிறுவனங்களுள் ஒன்றுதான், இந்தியன் ரயில்வே. சற்றேறக்குறைய 13 லட்சம் பேர் இதில் பணியாற்றுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 16 ரயில்வே மண்டலங்களில் 68 ஆயிரம் கி.மீ. ரயில் பாதை உள்ளது.

சராசரியாக ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் மேற்பட்டோர் இந்திய ரயில்வேயில் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இம்மாபெரும் நிறுவனத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது என்பது பெரும்பாலானோரின் ஆதங்கமாக உள்ளது. வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் தமிழ்நாட்டிலுள்ள தெற்கு ரயில்வேயில் தொடர்ந்து படையெடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் நீண்ட நெடுங்காலமாக உள்ளது.

ஐடிஐ முடித்தால் போதும்: ஆனால், இந்தப் பணிகளையும் நாம் எளிதாக வெல்ல முடியும். அதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு முடித்தவுடன் ஐடிஐ முடித்தால் போதும், ரயில்வே தேர்வுகளை எளிதாக எழுதி தேர்ச்சி பெற இயலும் என்கிறார், இளைஞர் பாண்டுரங்கன். ரயில்வே பணிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் நுழைய வேண்டும் என்ற தீராத தாகத்தில், தமிழ்நாடு முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்குச் (ஐடிஐ) சென்று ரயில்வே தேர்வுகள் குறித்து இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவர் பொறியியல் பட்டம் வென்றவர். ஆனால், முழுநேரமும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது பணியாக ஏற்றுச்செயல்படுகிறார்.

அறியாமையே காரணம்: இளைஞர் பாண்டுரங்கன் கூறுகையில், 'ரயில்வேயில் பணி புரிய வேண்டும் என்ற எனது லட்சியத்திற்குப் போதுமான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால், அதனை அடைய முடியாமல் போய்விட்டது. அந்த நிலை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இனி ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளாக இந்த விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய ஐடிஐ படிப்பின் மகத்துவம் என்ன..? ரயில்வேயில் அப்படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் எவை..? என்பது குறித்து ஐடிஐ மாணவர்களுக்கு சொல்லி வருகிறேன். லட்சக்கணக்கான ரயில்வே வேலை வாய்ப்புகளுக்கு ஐடிஐ படிப்பே முக்கிய நுழைவுவாயிலாகும். ஆனால், அறியாமை காரணமாக ரயில்வே பணிகளுக்குள் அவர்கள் கவனம் செலுத்தவில்லை' என்கிறார், வேதனையுடன்.

கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் : இந்நிலையை மாற்றுவதற்காகவே முழு நேர விழிப்புணர்வு பரப்புரையை இவர் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ரயில்வேயின் பல்வேறு பணிகளுக்கு ஐடிஐ மட்டுமே முதன்மைத்தகுதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தமிழ்நாடு மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்கிறார். ஆனால், இந்த விழிப்புணர்வு வடமாநில மாணவர்களுக்கு இருக்கின்ற காரணத்தால், ஐடிஐ முடித்ததும் ரயில்வே தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஐசிஎஃப், பொன்மலை போன்ற நிறுவனங்கள் உள்ளன. இங்கெல்லாம் ஐடிஐ படித்தவர்களுக்கே வாய்ப்பு என்பதை தமிழ்நாட்டு மாணவர்கள் உணரவில்லை. அதேபோன்று ஓராண்டு அப்ரண்டீஸ் படிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. ரயில்வே மட்டுமன்றி, மத்திய அரசின் இஸ்ரோ, பெல், ஓஎன்ஜிசி, கெயில், செயில், கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுஉலைகள் ஆகியவற்றிலெல்லாம் ஐடிஐ மாணவர்களுக்கே வாய்ப்புகள் அதிகம்' என்கிறார்.

இந்தி அவசியமில்லை: பொதுவாகவே நமது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இதுபோன்ற நிறுவனங்களில் சேர நடைபெறும் தேர்வுகளில் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், தமிழ்மொழியிலேயே தேர்வு எழுத முடியும். இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இல்லை. இதற்குக் காரணம், ரயில்வே தேர்வு குறித்த வழிகாட்டி நூல்கள் போதுமானதாக இல்லை.

இதற்காகவே ஓராண்டு கடும் உழைப்பின் வாயிலாக ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக தமிழிலேயே நூல் ஒன்றையும் பாண்டுரங்கன் தனது நண்பர் மனோஜ்குமார் துணையோடு உருவாக்கியுள்ளார். இதற்காக ரயில்வே ஊழியர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

இந்நூலின் உற்பத்தி விலையான ரூ.350க்கே வழங்கி வருகிறார். அதுமட்டுமன்றி, தமிழ்நாடு அரசுக்கு இதன் உரிமையை அப்படியே அளிக்கத் தயாராக உள்ளதாகவும், அதன் மூலம் மேலும் குறைந்த விலையில் மாணவர்களுக்கு இந்த நூலை வழங்க முடியும் எனவும் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் தெற்கு ரயில்வே பணிகளையும் வட மாநிலத்தவர்கள் கைப்பற்றக் காரணம் என்ன? விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் பாண்டுரங்கன்

வழிகாட்டுப் புத்தகம்: மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசால் பொது தகுதித் தேர்வு (சிஇடி) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவம் பயில முடியும் என்பதுபோல், இனி சிஇடியில் போதுமான மதிப்பெண் இருந்தால்தான் ரயில்வே, வங்கிப் பணிகளில் நுழைய முடியும். ஆனால், இது தமிழ்மொழியில்தான் நடைபெறும். ஆனால், இதற்கான வினாத்தாள் எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

அதற்கு எங்களது இந்த வழிகாட்டு நூல் மிகவும் உதவியாக இருக்கும். ஆகையால், இந்த நூலை தமிழ்நாடு அரசு இலவசமாக அனைத்து நூலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். இதன் மூலம் நகர்ப்புற மாணவர்கள் மட்டுமன்றி, கிராமப்புற மாணவர்களும் ரயில்வே பணிகளில் நுழைய வாய்ப்பு உருவாகும்' என்கிறார்.

ஐடிஐ படிப்பிற்கு அதிக கட்டணமும் கிடையாது” திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர் திருஞானசம்பந்தன் கூறுகையில், 'நான் தற்போது எலக்ட்ரீஷியன் படிப்பில் 2-ஆம் ஆண்டு பயில்கிறேன். பத்தும் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்வு பெற்ற நான், ஐடிஐ படிப்பை விரும்பித் தேர்வு செய்தேன்.

காரணம், ரயில்வேயில் நுழைய வேண்டும் என்பது எனது தீராத தாகம். அதற்கு ஐடிஐ படிப்புதான் உதவிகரமாக இருக்கும் என்பதை பாண்டுரங்கன் அளித்த விழிப்புணர்வின் வாயிலாக அறிந்துகொண்டேன். தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு படிக்கின்ற மாணவ, மாணவியரும்கூட ஐடிஐ படிப்பை நிறைவு செய்து ரயில்வே பணிகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்புகிறோம். ஐடிஐ படிப்பில் அதிகமாக கட்டணமும் கிடையாது.

ஆண்டிற்கு ரூ.200 தான். அதுமட்டுமன்றி மாதமொன்றுக்கு தமிழ்நாடு அரசால் கல்வி உதவித்தொகையாக ரூ.850 வழங்கப்படுகிறது. இதனை ஏழை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் ஐடிஐ படிப்பு முக்கியத்துவம் பெறாமல் போனதற்குக் காரணம் நமது மக்கள்தான்.

அதனை இப்போதும் மிகத் தாழ்வாகவே கருதுகிறார்கள். இந்தப் படிப்பை முடித்த மாணவர்கள் யாரும், ஸ்விக்கி, சோமோட்டோ என்று பணியாற்றுவதில்லை. அவர்கள் படித்த படிப்பிற்குரிய வேலையைத்தான் எங்கிருந்தாலும் மேற்கொள்கிறார்கள். ஆனால், பொறியியல், டிப்ளமோ முடித்த மாணவர்கள் அப்படி இல்லை என்ற யதார்த்தத்தை நாம் உணர வேண்டும்' என்கிறார்.

வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கான தொழில்கள் உத்தரவாதப்படுத்தப்பட்டிருந்தாலும், ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான நுழைவுச்சீட்டாகவும் அவை திகழ்வதால், தமிழ்நாடு மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்ற இளைஞர் பாண்டுரங்கனின் இந்த விழிப்புணர்வு முயற்சி, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பாராட்டுக்குரியதாகும்.

இதையும் படிங்க: பள்ளி திறந்த முதல் நாளே வழங்கப்பட்ட பாடப் புத்தகங்கள்; மாணவர்கள் மகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.