ETV Bharat / state

“டெங்கு தடுப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்காத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்” - சேலம் ஆட்சியர் உத்தரவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 7:51 AM IST

Dengue
டெங்கு நோய்த் தடுப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு

Dengue: டெங்கு நோய்த் தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் பேட்டி

சேலம்: டெங்கு தடுப்பு நடவடிக்கை பணியாக நெத்திமேடு அருகில் இட்டேரி தெருவில் உள்ள பழைய நெகிழி சேகரிப்புக் கிடங்கில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் நேற்று (அக்.10) மாலை ஆய்வு மேற்கொண்டார். பின், செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறுகையில், ‘பருவ மழை பெய்து வருவதையொட்டி, மாவட்ட நிர்வாகத்தால் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 49 எஸ்கே கார்டன் பகுதியில், பழைய பொருட்கள் சேகரிக்கும் கிடங்கில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழு ஆய்வு பணியை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.கார்மேகம் இஆப., அவர்கள் மேற்கொண்டார். உடன் மாநகர நல அலுவலர் மரு.ந.யோகானந் உள்ளார். pic.twitter.com/e9pQ1D5KW3

    — Salem Corporation (@salemcorpn) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தி ஆகிறது என்பதால், வீட்டின் உள்ளே மூடப்படாமல் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கும் தண்ணீர் பாத்திரங்கள், தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் தேங்கும் தண்ணீர் மற்றும் சுற்றுப்புறத்தில் கிடக்கும் பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், நெகிழி கப்புகள் ஆகியவற்றில் தேங்கும் மழை நீரில் இருந்தும் டெங்கு லார்வாக்கள் அதிகளவில் உற்பத்தியாக வாய்ப்பாக அமைகிறது.

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சிப் பகுதியில் 500 பணியாளர்களும், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 650 பணியாளர்களும் என மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக 1,150 கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று லார்வா புழுக்களை ஒழித்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாவட்ட அளவில் அலுவலர்களுக்கான வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் நாள்தோறும் டெங்கு தடுப்புப் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தால் பொது சுகாதார நலன் கருதி, தொடர்ந்து டெங்கு நோய்த் தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் மீது பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வினை மேற்கொள்ள சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. டெங்கு கொசுக்கள் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெரியவர்களைக் கடிப்பதால், ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், வருமுன் காக்கும் வகையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து அறிந்து செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:இஸ்லாமிய கைதிகள் முன் விடுதலை; ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.