தமிழ்நாடு

tamil nadu

இறப்பிலும் இணைபிரியாத கோவை தம்பதி

By

Published : Feb 25, 2023, 3:16 PM IST

Updated : Feb 25, 2023, 6:22 PM IST

கோவையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி நேற்றிரவு உயிரிழந்த நிலையில் இன்று காலை அவரது மனைவியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி
இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

இணைபிரியாத தம்பதி

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் பழனிச்சாமி (74). இவர் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு (பிப். 24) கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். பழனிச்சாமி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவராக இருந்து வந்தார்.

பல லட்சம் தொழிலாளர்களுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு சலுகைகளை பெற்றுக்கொடுத்துள்ளார். குறிப்பாக விசைத்தறி தொழிலுக்கான இலவச மின்சாரத்திற்காக பல முறை பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டவர். அவரது உடல் சோமனூர் விசைத்தறியாளர்கள் சங்க கட்டட வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பழனிச்சாமி மனைவி கருப்பாத்தாள் (65) இன்று (பிப். 25) காலை உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியாமல் கணவனும், மனைவியும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், இறந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விசைத்தறி தொழிலை லாபகரமாக நடத்த வேண்டுமெனவும், விசைத்தறியாளர்கள் முன்னேற்றத்திற்காகவும் அரும்பாடுபட்ட பழனிச்சாமியின் இழப்பு அனைத்து பகுதி மக்களுக்கும், அனைத்து விசைத்தறியாளர்களுக்கும் பேரிழப்பாகும்.

விசைத்தறி தொழிலுக்கான மின்கட்டண குறைப்பு தொடர்பாக சென்னையில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்த போது, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வரமுடியவில்லை என்றாலும், பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது என்பதை கேட்டறிந்து அமைச்சர் உறுதியளித்தை அடுத்து விசைத்தறி போராட்டத்தை வாபஸ் வாங்கியவர்.

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

மின் கட்டண குறைப்பு மற்றும் விசைத்தறிக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக உயர்த்துதல் ஆகிய அறிவிப்பு தேர்தல் முடிந்ததும் வர உள்ள சூழலில், இதனை கேட்காமல் உயிரிழந்தார் என்பது வருத்தமளிக்கிறது. விசைத்தறியாளர்கள் நம்பிக்கையாக வாழ்ந்த பழனிச்சாமியின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறிய ஈஸ்வரன், அவரைச் சார்ந்தவர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்தார். இதையடுத்து இருவரின் உடலும் உறவினர்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், சோமனூர் அடுத்த அய்யம்பாளையத்தில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: TNPSC Group 2: குரூப்-2 தேர்வில் குழப்பம்: டிஎன்பிஎஸ்சி அளித்த விளக்கம்?

Last Updated :Feb 25, 2023, 6:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details