ETV Bharat / state

திருவிழாவில் ஆட்டின் ரத்தத்தைக் குடித்த பூசாரி உயிரிழப்பு.. ஈரோட்டில் சோகம்! - Temple Priest died

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 4:39 PM IST

Updated : May 23, 2024, 6:16 PM IST

Temple Priest died: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கோயில் திருவிழாவில் ஆட்டுக் கிடாய்களின் ரத்தத்தைக் குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவிழா நடந்த இடம் மற்றும் உயிரிழந்த பூசாரி
திருவிழா நடந்த இடம் மற்றும் உயிரிழந்த பூசாரி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் செட்டியா பாளையத்தில் அண்ணமார் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் திருவிழா கடந்த மே 6ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இத்திருவிழாவிற்காக கோயில் பூசாரிகள் 16 பேர் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். இந்த நிலையில், இன்று அம்மை அழைத்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பரண் கிடாய் பூஜை நடைபெற்றது. இப்பூஜையின் போது, கோயில் வளாகத்தில் உள்ள பரணில் பக்தர்கள் கொடுத்த 20க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்களை பூசாரிகள் வெட்டினர்.

வெட்டிய ஆட்டின் ரத்தத்தில் வாழைப்பழத்தைப் பிசைந்து சாப்பிடுவது, அதை குழந்தை இல்லாதவர்கள், தொழில் தடை, உடல்நிலை சரியாக வேண்டுவோர் என வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் அனைவருக்கும் பூசாரிகள் வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில், பரண் கிடாய் பூஜையில் கலந்து கொண்ட நல்லகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (45) உட்பட 5 பூசாரிகள், ஆட்டின் ரத்தம் மற்றும் வாழைப்பழம் பிசைந்த ஆட்டின் ரத்தத்தைச் சாப்பிட்டுள்ளனர். இதில் பழனிச்சாமிக்கு சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மயங்கி விழுந்த பழனிச்சாமியை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரின் உடல் உடற்கூறு ஆய்விற்கு கொண்டு செல்லப்பட்டது.

கோயில் திருவிழாவில் உயிரிழந்த பழனிச்சாமி வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவியும், பிரபு குமார், தினேஷ் என்ற இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுகுறித்து சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயம்புத்தூரில் யானைகள் கணக்கெடுப்பைத் தொடங்கிய வனத்துறையினர்! - Elephants Census In Tamil Nadu

Last Updated : May 23, 2024, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.