ETV Bharat / sports

முடிவுக்கு வந்தது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை.. 'வெளிச்சம் பெறாத கற்பகவிருட்சம்' தினேஷ் கார்த்திக் என ரசிகர்கள் புகழாரம்! - Dinesh Karthik Retirement

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 9:23 AM IST

Dinesh Karthik Retirement: ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியுடன் பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

தினேஷ் கார்த்திக்(கோப்புப்படம்)
தினேஷ் கார்த்திக்(கோப்புப்படம்) (Credits - ANI)

சென்னை: தினேஷ் கார்த்திக் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெற்றார். கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக், ஆஸ்திரேலியாவுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், தனது இளம் வயது முதல் ரஞ்சி கோப்பை போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார். இந்திய அணிக்கு வெளிநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக வசிம் ஜாஃபருடன் பல போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.

2004இல் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 14 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், பின்னர் அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்தார். தோனியின் வருகைக்கு பிறகு தினேஷ் கார்த்திக் பல்வேறு தொடர்களில் கூடுதல் விக்கெட் கீப்பராக இடம் பெற்றார். அப்போதும் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு ரன்கள் சேர்த்து வந்தார். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 1025 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு ஃபினிஷராக பல போட்டிகளில் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

94 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் சராசரியில் 1752 ரன்கள் எடுத்துள்ளார். தினேஷ் கார்த்திக் என்றால் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது 2018இல் வங்கதேசத்திற்கு எதிரான nidahas trophy இறுதிப் போட்டி தான். கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் தனி ஆளாக சிக்சர்களாக விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 686 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்கு மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக பங்களிப்பை வழங்கியுள்ளார்.

2008ஆம் ஆண்டு முதல் 2024 வரை அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடர்களில் டெல்லி, பஞ்சாப், மும்பை, குஜராத், கொல்கத்தா, பெங்களூரு என ஆறு அணிகளுக்காக களமிறங்கியுள்ளார். ஆனால் தனது சொந்த மாநிலமான சென்னை அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பது தனக்கு வருத்தமளிப்பதாக சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அதே நேரத்தில் மும்பை அணிக்கு விளையாடியது தனது ஆட்டத்தில் மெருகேற்றி கொள்ள உதவியதாகவும் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடி 4842 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், இந்த வருடம் ஃபினிஷராக 330 ரன்கள் எடுத்துள்ளார். எவ்வளவு வேகமான பந்துகளையும் ஸ்வீப் ஷாட் ஆடுவதில் தினேஷ் கார்த்திக் வல்லவர் என கூறலாம். 39 வயதாகும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகவும் இருந்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்கிற்கு மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது போல் இந்திய அணியில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் குறுகிய காலத்தில் தோனியின் வளர்ச்சியால் தினேஷ் கார்த்திக் மறைமுகமாக பாதிக்கப்பட்டார் ஒருதரப்பினர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். டி20 கிரிக்கெட்டில் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக பார்க்கப்படும் தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் தோல்வியுடன் தனது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் அவர் வெளிச்சம் பெறாத கற்பகவிருட்சம் என ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ரிங்கு சிங் இல்லாதது பேரிழப்பு - ஹர்பஜன் சிங் கருத்து! - Harbhajan Singh About Indian Team

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.