ETV Bharat / state

மலை சுனாமியாக மாறும் குற்றால அருவிகள்! தொடரும் மரணங்கள்! தீர்வு என்ன? - Courtallam Waterfalls

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 4:37 PM IST

Updated : May 24, 2024, 2:59 PM IST

Courtallam Falls: பழைய குற்றாலத்தில் 17 வயது சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குற்றாலத்தில் கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் வாயிலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தென்காசியை சேர்ந்த பொதுமக்கள்
தென்காசியை சேர்ந்த பொதுமக்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

தென்காசி: குற்றால அருவிகள் என்றாலே சில்லென்ற காற்று, சாரல் மழை, மிளகாய் பஜ்ஜி என இனிமையான நினைவுகள் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இனி அப்படி இருக்கப் போவதில்லை என அருவிகள் எச்சரிப்பது போல அமைந்துள்ளன சமீபத்திய உயிரிழப்புகள். அருவிகள் என்றாலே காட்டுக்குள் நடந்து சென்றுதான் அடைய முடியும். ஆனால் தென்காசி நகருக்கு மிக அருகாமையில் பொதுப்போக்குவரத்து வசதியோடு இருப்பது தான் குற்றால அருவியின் சிறப்பு.

தென்மேற்கு பருவமழைக்காலம் வந்துவிட்டாலே குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கி விடும். வழக்கமாக ஜூன் மாதத்தில் துவங்கும் சீசன், இந்த ஆண்டு மே மாதத்திலேயே பெய்து வரும் மழையால் களைகட்டத் தொடங்கியுள்ளது. வழக்கத்துக்கு மாறான சீசன் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் சில அபாயங்களையும் உணர்த்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த தென் மாவட்ட மழை தாமிரபரணிக் கரையோர மக்களின் தூக்கத்தைத் தொலைத்தது. தற்போதும் திடீரென பெய்யும் மழை மற்றும் இதனைத் தொடர்ந்த வெள்ளத்தால் கணிக்க முடியாதவையாக குற்றால அருவிகள் மாறி வருவதாக கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகப்படியான கனமழை பெய்த காரணத்தால் பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு குளித்துக் கொண்டு இருந்த 17 வயது சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசு பொருளானது.

இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய தென்காசியைச் சேர்ந்த செந்தூர் பாண்டியன், "குற்றாலத்தில் இதுவரை நடந்த உயிரிழப்புகளில் பெரும்பாலும் மனித தவறுகள் அதிகம் இருக்கும். மது போதையில் குளிக்க வந்து தவறி விழுந்து உயிரிழப்பது மற்றும் அதிகமாக தண்ணீர் இருப்பது தெரிந்தும் அங்கு சென்று குளிக்க நினைத்து வழுக்கி விழுந்து உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்திருக்கின்றன. ஆனால் தற்போது நடந்த சம்பவத்தில் மனிதத் தவறுகள் பெரிய அளவில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இதைக் கவனத்தில் எடுத்து வனத்துறையினரும், காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் தடுக்க முடியும்" என தெரிவித்தார்.

அதே போல சமீபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்த பழைய குற்றாலம் பகுதியில் வெள்ளம் ஓடிச் சென்று பாயும் பகுதியில் 20 அடிக்கு மேலான பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் முழுவதும் ஆபத்தான பாறைகள் நிறைந்திருப்பதையும் செந்தூர் பாண்டியன் குறிப்பிட்டார். "எதிர்பாராத வெள்ளம் ஏற்படும் போது யாரேனும் அடித்துச் செல்லப்பட்டாலும், இந்த பள்ளத்தில் தான் விழ வேண்டிய நிலை இருக்கிறது. இது மட்டுமின்றி கால் நழுவி யாரேனும் விழுந்தாலும் மரணம் ஏற்படும் அபாயம் இருப்பதால், அந்த பகுதி முழுவதும் வலைகள் அமைக்கலாம்" என்றார்.

மூன்று துறைகளின் நடவடிக்கை தேவை: இதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் கடை வைத்திருக்கும் பாலா என்பவர் கூறுகையில்,வனத்துறை, போலீசார், தீயணைப்புத்துறையினரை ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் இது போன்ற மரணங்களை தவிர்க்கலாம் என ஆலோசனை கூறுகிறார்.

துரித நடவடிக்கை தேவை: இது குறித்து வியாபாரி தில்லை கூறியதாவது,"குற்றாலத்தில் இதைவிட பெரிய வெள்ளங்கள் வந்த போதும் கூட உயிர் பலி சம்பவங்கள் நடந்ததில்லை. பொதுவாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது குளித்துக் கொண்டிருப்பவர்களால் தண்ணீர் வரத்து அதிகரிப்பதை உணர முடியும். அது மட்டுமல்லாமல் அருவியில், சிறு கற்கள் மரக்கிளைகள் போன்றவை விழுவதை பார்த்த உடனேயே தண்ணீரின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்து நகர்ந்து விடுவார்கள். அங்கிருக்கும் பணியில் இருக்கும் போலீசார் உடனடியாக குளிக்க தடையும் விதித்து விடுவார்கள். ஆனால் சில நாட்களாக அருவி வீடியோக்களை பார்க்கும்போது வெகு சில நொடிகளிலேயே கணிக்க முடியாத படி அதிகமாக தண்ணீர் வந்துள்ளதை நம்மால் உணர முடிகிறது, அருவிகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

கடந்த 6 நாள்களுக்குப் பின்னர் இன்று (மே23) குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவ்வப்போது விதிக்கப்படும் தடைகளால், வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். எனவே குற்றாலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதமாக மேற்கொண்டு பாதுகாப்பான சுற்றுலாவை உறுதி செய்ய வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தின் சார்பாகவும், காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குளு குளு குற்றாலம் செல்ல திட்டமா..? அப்போ இதை படிங்க!

Last Updated : May 24, 2024, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.