ETV Bharat / state

Courtallam: தொடங்கியது குளுகுளு குற்றாலம் சீசன்.. குற்றாலத்தில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்.. குற்றாலம் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் விபரம்!

author img

By

Published : Jun 22, 2023, 3:57 PM IST

Updated : Jun 22, 2023, 4:04 PM IST

Etv Bharat
Etv Bharat

பெயரைக் கேட்டாலே மனதுக்குள் சாரல் அடிக்கும் இடமென்றால் அது குற்றாலம் என்றால் மிகையாகாது. நடப்பாண்டுக்கான குற்றால சீசன் இனிதே துவங்கியுள்ள நிலையில், குற்றால அருவியின் சிறப்புகள், அருவி தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்கள், குற்றாலம் மெயின் அருவி மட்டுமின்றி, ஐந்தருவி, அகத்தியர் அருவி, செண்பகாதேவி அருவி என காணவேண்டிய இடங்கள் என நினைத்தாலும் பார்க்க முடியாத இடங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பு அலசுகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தென்காசி: தமிழகத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பல்வேறு இயற்கை பொக்கிஷங்களை தன்னகத்தை கொண்டுள்ளது. அந்த வகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் 'குற்றாலம் அருவிகள்', இயற்கையில் எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. 'குற்றாலம்' (Courtallam) என்றாலே குளு குளு தென்றல் காற்று ரம்மியமான மலை அருவிகளும் தான் நினைவுக்கு வரும்.

எப்படி செல்ல வேண்டும்?: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இந்த குற்றால அருவிகள் (Coutrallam Falls) அமைந்துள்ளது. தென்காசி நகரில் இருந்து சுமார் 5 கிமீ தூரத்தில் இந்த குற்றாலம் உள்ளது. சென்னையில் இருந்து தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தென்காசிக்கு இயக்கப்படுகிறது. ரயில் நிலையத்தில் டவுன் பேருந்து வசிதிகள் தனியார் ஆட்டோக்கள் அதிகம் உள்ளன.

சீசன் எப்படி தொடங்குகிறது?: முழுக்க முழுக்க இயற்கையாக உருவாகியுள்ள அருவியான குற்றாலத்தில் ஆண்டுதோறும், ஜூன் மாதம் சீசன் தொடங்கும். அதாவது கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும். அந்த சமயத்தில் தென்மேற்கு பருவ காற்று வீசும்போது, அண்டை மாநிலமான கேரளாவில் பலத்த மழை பெய்யும். கேரளாவில் இருந்து தென்மேற்கு பருவ காற்றோடு கலந்த மழைச்சாரல் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக கிழக்கு நோக்கி வீசும்.

அந்த வகையில் குற்றாலம் மலை மீது வீசும் மழைச்சாரல், பல்வேறு ஓடைகள் வழியாக பாய்ந்து ஓடி அருவிகளில் வந்து கொட்டுகிறது. குற்றாலத்தில் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி, பாலருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி உட்பட ஒன்பது அருவிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் இங்கு களைக்கட்டும். அந்த நேரத்தில் தென்றல் காற்றுடன் கலந்த மழைச்சாரல் வீசும். மலைச்சாரலுடன் இதமான வானிலையை அனுபவித்தபடி குற்றாலம் அருவிகளில் குளிப்பது என்பது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

எனவே, குற்றால சீசன் நேரத்தில் அருவிகளில் குளிப்பதற்காக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் லட்சக்கணக்கில் இங்கு வருவர். குற்றாலம் அருவிகளை போன்று, பிற மாவட்டங்களில் அருவிகள் இருந்தாலும் பெரும்பாலான அருவிகள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டதாக இருக்கும். அதேபோல, பெரும்பலான அருவிகள் வனப்பகுதியை ஒட்டியே அமைந்திருக்கும். ஆனால், குற்றாலம் அருவி மட்டுமே மக்கள் வசிக்கும் நகரில் அமைந்துள்ளது. எனவே, இது குற்றால அருவிக்கு உண்டான சிறப்பாகும்.

மூலிகை தண்ணீர்: இது தவிர மூலிகைச்சாறு கலந்த தண்ணீர் அருவிகளில் கொட்டுவதால் குற்றாலத்தில் குளிக்கும் போது, பல்வேறு விதமான நோய்கள் தீரும் என வரலாறு கூறுகிறது. பல ஆய்வுகளும் இதை உறுதி செய்துள்ளன. அதாவது, அகத்தியர் (Agastya) சித்தர் வாழ்ந்த இடமாக கருதப்படும் பொதிகை மலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருக்கின்றன. இந்த மூலிகைகளை வைத்து அகத்தியர் சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்துள்ளார்.

குற்றாலத்தில் குளிப்பதால் இவ்வளவு நன்மையா?: பொதுவாக, குற்றாலம் தண்ணீரில் குடித்தால் உடலுக்கு நல்லது என்று பலர் கூறுவர். ஆனால், அறிவியல் பூர்வமாக வியந்து பார்க்கும் அளவுக்கு எண்ணற்ற மூலிகைகள் அங்கு இருப்பது பெரும்பாலானவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், குற்றாலம் மலைப்பகுதியில் சுமார் 2,000 வகையான மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளும், மரங்களும், செடிகளும், வண்ணமயமான மலர்களும் உள்ளன.

குற்றாலம் - 'தென்னகத்தின் ஸ்பா': மங்குஸ்தான், பலா, சப்போட்டா போன்ற பழங்களும் இங்கு கிடைக்கின்றன. எனவே தான், குற்றாலம் மலையை, "பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை" என்பார்கள். குறிப்பாக, மூலிகை செடிகள் மண்ணோடு மண்ணாக மக்கியதிலிருந்து ஏராளமான கனிமங்கள் இங்கு படிந்து கிடக்கின்றன. எனவே, சீசன் நேரத்தில் இந்த மலையில் பாய்ந்து ஓடும் தண்ணீர், மூலிகைச்சாறு மற்றும் கனிமங்களோடு கலந்து அருவியில் கொட்டுவதால் அதில் குளிக்கும் போது மனநோய், மூட்டு வலி உட்பட பல்வேறு நோய்கள் குணமாகும் எனக் கூறப்படுகிறது. எனவே, குற்றாலம் 'தென்னகத்தின் ஸ்பா' என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக, குற்றாலம் அருவிகளில் குளித்தால் மன அமைதி மற்றும் மனப்புத்துணர்ச்சி ஏற்படும்.

இதுகுறித்து கிட்டதட்ட 50 ஆண்டுகளாக, குற்றாலம் மலைப்பகுதியில் உள்ள மூலிகைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மருத்துவர் செல்லத்துரை நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'தமிழகத்தில் உள்ள மலையில் சிறப்புமிக்க மலை குற்றாலம். இங்கு அகஸ்தியர் சித்தர் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். குற்றாலம் ஒரு 'ஸ்பா' என்று அழைக்கப்படுகிறது. அதாவது கனிமங்கள் நிறைந்த இடம்; கனிமங்கள் சேர்ந்து தான் நமக்கு அருவியாக கொட்டுகிறது.

மூலிகை தாவரங்கள் அதிகமாக இருப்பதால் தான் கனிமங்கள் இங்கே இருக்கிறது. வரையாட்டு முட்டை கைலாசபர்வதம் வாய்தா மலை போன்ற மலைகளில் இருந்து சிறு சிறு ஓடைகளாக தண்ணீர் வந்து பின்னர், அது ஒன்றாக சேர்ந்து அருவிகளில் கொட்டுகிறது. இந்த அருவிகள் ஒன்றாக சேர்ந்து 'சிற்றருவி' என்ற பெயரில் குற்றாலத்தை விட்டு வெளியே செல்கிறது. தண்ணீர் வரும்போது கனிமம் நிறைந்த மண் மற்றும் மூலிகைகளைத் தழுவி வருகிறது.

எனவே மூலிகைச்சாறு தண்ணீரில் கலப்பதால் குற்றாலத்தில் குளிக்கும் போது, நமது உடலில் மூலிகைச்சாறு படுகிறது. குற்றாலம் என்றாலே, குற்றாலம் என்ற பெயரில் ஒரு மூலிகை இருக்கிறது. மலையிலிருந்து கிட்டதட்ட 4,500 முதல் 1,200 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் பாய்ந்து வந்து அருவிகளில் கொட்டுகிறது. கிட்டதட்ட அருவிக்கரைகளில் மட்டும் 1,600 வகையான மூலிகைகள் உள்ளன. அதிகமாக காயகல்ப மூலிகைகள் உள்ளன. ரோம விருட்சம், கல்தாமரை போன்ற காயகல்ப மூலிகைகள் உள்ளன. மரத்தைப் பொறுத்தவரை, மர ஊறி என்ற அரியவகை மூலிகை மரம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் மிக உயரமான மரம் இதுதான். அந்த மரங்களின் இலை காய்கள் தண்ணீரில் விழுந்து மக்கி தண்ணீரில் கலக்கிறது.

மனநோய் தீரும்; கிழக்கிந்திய கம்பெனி ஆய்வில் உறுதி: ஆதி காலத்தில் மனிதர்கள் ஆடைகள் தயாரிக்க இந்த மரத்தின் பட்டையை இடித்து அதை கட்டியுள்ளனர். இதை போன்று, அரிய வகை மரங்களும் இங்கே உள்ளன. தனித்துவம் வாய்ந்த நாவல் மரமும் குற்றாலத்தில் இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு மன நோயாளிகளை தினமும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அழைத்து வருவார்கள். மன நோயாளிகள் காலையில் இங்கு குளித்தால்தான், மனம் அழுத்தம் அவர்களுக்கு குறையும். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அப்போதே இதை ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார்கள்.

அவர்கள் குற்றாலத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்று லண்டனில் வைத்து ஆய்வு செய்து மருத்துவ குணத்தை உறுதி செய்தார்கள். குற்றாலம் மலையில் எட்டு கிலோமீட்டர் முதல் 12 கிலோமீட்டர் வரை தண்ணீர் பாய்ந்து வருகிறது. குறிப்பாக, குற்றால அருவிகளில் குளித்தால் மன அழுத்தம் குறையும். அதேபோல், இங்கு குளித்தால் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, சரும நோய்கள் குணமாகும்.

மூலிகை கலந்த தண்ணீர் நமது தலை உச்சியில் விழும்போது மன அழுத்தம் குறையும்; ஞாபக சக்தியும் அதிகரிக்கும். மற்ற அருவிகளுக்கும் குற்றாலம் அறிவிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு இரண்டு பருவமழை இங்கு கிடைக்கிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை நேரங்களில் இங்கே மழை பெய்யும். எனவே, ஆண்டுக்கு எட்டு மாதம் இந்த மலைப்பகுதியில் ஈரப்பதம் காணப்படும். வேறு எங்கேயும் எட்டு மாதம் மலைப்பகுதியில் ஈரப்பதம் இருக்காது. குறவன் கண்ட மூலி என்ற அறிய வகை மூலிகை செடி இங்கு உள்ளது. இந்த மூலிகையை வைத்து குற்றாலம் மலையில் வாழும் பழங்குடி மக்கள் அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு காண்கின்றனர். திரிகூட ராசாப்பக் கவிராயர் அதைப்பற்றி அழகாக எழுதியுள்ளார். குறிஞ்சி பாட்டில் குற்றாலத்தின் சிறப்பு இடம் பெற்றிருக்கும் என்று மருத்துவர் செல்லத்துரை தெரிவித்தார்.

இதனிடையே, மருத்துவர் செல்லத்துரை பகிர்ந்துள்ள கருத்துக்களை வைத்து பார்க்கும் போது குற்றாலம் மலையில் மிகப்பெரிய பொக்கிஷம் இருப்பதும் அதைப் பற்றி சரியான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது தெரிகிறது. அதாவது, பெரும்பாலான மக்கள் குற்றாலம் என்றாலே குளிர்ந்த தென்றல் காற்றை அனுபவிக்க வேண்டும், சுற்றுலா செல்ல வேண்டும், குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், குற்றாலம் பகுதியில் பிரத்தியேகமாக விளையும் பழங்களை வாங்கி சாப்பிட வேண்டும் என்றுதான் இங்கு வருகின்றனர்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, அறிவியல் ரீதியாக மருத்துவ குணம் சார்ந்த மூலிகைச் செடிகளின் சாறு கலந்த தண்ணீர் என்பதால் குற்றாலம் அருவிக்குள் மிகப்பெரிய இயற்கை மருத்துவமே புதைந்து கிடக்கிறது என்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், காலப்போக்கில் மரங்கள் அழிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பருவமழையும் பொய்த்து வருகிறது. அந்த வகையில், தென்மேற்கு பருவமழை பொய்ப்பதால் குற்றாலம் சீசன் உரிய நேரத்தில் துவங்குவதில்லை.

முன்பு ஒரு காலத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே சீசன் களைக்கட்ட தொடங்கிவிடும். ஜூன் முதல் வாரத்தில் சாரல் மழை தென்காசி மக்களின் உடலையும் மனதையும் குளிர்விக்கும். ஆனால், தற்போது சமீப காலமாக சீசன் காலம் தவறி தொடங்குகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், மிகவும் தாமதமாக சீசன் தொடங்கியுள்ளது. வழக்கமாக, இந்த நேரத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

ஒரு புறம் சீசன் தாமதமாவதால் அதை அனுபவிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாந்தாலும், மறுபுறம் குற்றால அருவிகளை நம்பி வணிகம் செய்து வரும் நூற்றுக்கணக்கான கடை வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். அதாவது குற்றாலம் சீசனை நம்பி மெயின் அருவி, பழைய அருவி ஐந்தருவி, பாலருவி போன்ற அருவிகளை சுற்றி நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு குற்றாலம் மலையில் இருந்து பிரத்யேகமாக விளையும் அரிய வகை பழங்களான மங்குஸ்தான் போன்ற பழங்கள் மற்றும் வாழைக்காய் சிப்ஸ், குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள், பெண்களுக்கு தேவையான பேன்சி பொருட்கள் போன்ற பல்வேறு கடைகள் இங்கு அமைந்துள்ளன.

இங்கு வரும் மக்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்துவிட்டு கடைகளில் ஷாப்பிங் செய்வார்கள். ஆனால், சீசன் தொடங்குவதில் தாமதம் ஆவதால் வியாபாரம் நடைபெறாமல் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், குற்றாலம் என்றாலே சிறப்பு தான். பிற அருவிகளை காட்டிலும், இங்கு இயற்கையாக தண்ணீர் விழுவதால் ஏராளமான மக்கள் இங்கு வருவார்கள். குற்றாலம் மலையில் குளித்தால் உடலுக்கு ஆரோக்கியம். ஆனால், சமீப காலமாக சீசன் சரிவர தொடங்குவதில்லை; இந்த ஆண்டும் சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் பெரிதும் வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தனர். அத்தோடு பொழுதுபோக்கு பூங்காக்கள், குறிப்பாக பெண்களுக்கு கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லாட்ஜ் வசதி எப்படி?: அருவியில் குளிப்பதைத் தாண்டி, குளு குளுவென வீசும் தென்றல் காற்றை அனுபவிக்க, இங்கே மக்கள் குடும்பத்தோடு வந்து நாள் கணக்கில் தங்குவார்கள். எனவே, குற்றாலம் அருவிகளை சுற்றி ஏராளமான தனியார் விடுதிகள் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன. பொதுமக்களில் பண வசதிக்கு ஏற்ப காட்டேஜ் தங்கும் விடுதி ஏராளம் உள்ளன. அரசு சார்பில் குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமாக ஒரு விடுதி இருந்தது. ஆனால், அதை தற்போது தனியாருக்கு ஏலம் விட்டு விட்டனர்.

சுற்றுலாத்துறை சார்பாக இருந்த விடுதியை, தென்காசி மாவட்ட காவல்துறை கையகப்படுத்தி உள்ளது. எனவே, அரசு சார்பில் குற்றாலத்தில் தற்போது விடுதிகள் எதுவும் இல்லை. இங்கு வரும் மக்கள் தனியார் விடுதியில் தங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. விடுதி கட்டணத்தை பொறுத்தவரை, மக்களின் வசதிக்கேற்ப குறைந்தபட்சம் 400 ரூபாய் முதல் அதிகபட்சம் லட்சக்கணக்கில் விடுதிகள் உள்ளன.

அருகில் வேறு என்ன பார்க்கலாம்?: 'குற்றாலம் டூர்' என்பது ஒரு நாளில் முடிந்து விடாது; குற்றாலம் அருவியில் குளித்துவிட்டு அங்கேயே தங்கி குற்றாலத்தின் இதமான கிளைமேட்டை அனுபவிக்கலாம். குற்றாலத்தில் குளுமையில் நனைந்த கையோடும், நாம் செல்ல வேண்டிய முக்கிய இடங்கள் அங்கு நிறையவே உள்ளன. பொதுவாக செய்திகளில் நாம் பார்ப்பது மெயின் அருவி மட்டும்தான். இது தவிர பழைய அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, பாலருவி என மொத்தம் எட்டு அருவிகள் உள்ளன. இதில் மெயின் அருவி பழைய அருவி, ஐந்தருவி, புலி அருவி ஆகிய நான்கு அருவிகள் மட்டுமே மலைக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ளன. மெயின் அருவியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஐந்தருவி அமைந்துள்ளது. அதேபோல் மெயின் அருவியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் பழைய அருவியும், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புலி அருவியும் அமைந்துள்ளன. மீதமுள்ள சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, பாலருவி ஆகிய நான்கு அருவிகள் மெயின் அருவியின் இடது புறமாக உள்ள மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன.

முதலில் சிற்றருவி உள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சிற்றருவியை சென்றடையலாம். பின்னர், அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அருவியும், மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தேனருவி, பாலருவி ஆகிய அருவிகளும் அமைந்துள்ளன. இந்த நான்கு அருவிகளுக்கும் செல்வதற்கு வாகன பாதை கிடையாது. பாறைகளில் படிக்கட்டு அமைத்து வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. நடந்துதான் செல்ல வேண்டும். ஆனால், பாதுகாப்பு கருதி மேற்கண்ட நான்கு அருவிகளிலும் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளிப்பதில்லை.

செண்பகாதேவி அருவியில் புகழ் பெற்ற செண்பகாதேவி கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று இங்கு திருவிழா நடைபெறும். எனவே, வருடத்திற்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமி தினத்தில் மட்டும் பொதுமக்கள் செண்பகாதேவி அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றபடி குளிப்பதற்காக, இந்த நான்கு அருவிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. அதேபோல், செண்பகாதேவி அருவி அருகில் தனியார் எஸ்டேட் உள்ளது. இங்கு குற்றாலம் மலையின் சிறப்புமிக்க பலமான மங்குஸ்தான் பழம் அதிக அளவில் விளைகிறது. எனவே, தொழிலாளர்கள் மட்டும் இங்கு சென்று வருவார்கள்.

மேலும், அருகில் புகழ்பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதேபோல், செங்கோட்டை அருகே திருமலை குமாரசாமி கோயில் இலஞ்சி முருகன் கோயில் போன்ற இடங்கள் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாக, மலையில் அமைந்திருக்கும் திருமலை குமாரசாமி கோயிலுக்கு பயணம் மேற்கொள்வது என்பது ஒரு பசுமையான அனுபவமாக இருக்கும். ஏராளமான சினிமா திரைப்படங்களுக்கு திருமலை குமாரசாமி கோயில் சூட்டிங் நடைபெறுகிறது.

அதேபோல், குண்டாறு நீர் தேக்கம், அடவி நயினாறு நீர்த்தேக்கம் போன்ற இடங்கள் உள்ளன. மேலும், குற்றாலத்தில் இருந்து மிக அருகில் கேரளா எல்லை அமைந்துள்ளது. எனவே, வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் குற்றாலத்திற்கு வந்தால் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க: Actor Vijay: சக்சஸில் முடிந்த 234.. விஜயின் அரசியலுக்கு விடியல் தருமா?

Last Updated :Jun 22, 2023, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.