தமிழ்நாடு: தமிழகத்தின் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சிலாப் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி: நெல்லை, டவுன், புட்டாரத்தி அம்மன் தெருவில் குடியிருந்து வரும் மகேந்திரன், மாரிவள்ளி தம்பதியின் மகள் அகல்யா 2ஆம் வகுப்பு படித்த வந்த நிலையில், இன்று வீட்டின் கதவை திறக்கும் போது, வீட்டின் ஸ்லாப் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார். ஆனால், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அகல்யா உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, காவல் துறையினர் சிறுமியின் உடலைப் பெற்று, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக நேற்று பெய்த கனமழையால் சிலாப் வலுவிழந்து விழுந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்து, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழஅழகியநல்லூர் கிராமத்தில் ஆனந்தபிரியா என்பவர், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 15) பெய்த கனமழையினால் வீட்டின் மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று ஆனந்தபிரியா வீட்டில் தனது பிள்ளை மற்றும் உறவினர்களின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மேற்கூரை இடிந்து கீழே விழுந்துள்ளது. இதில் வீட்டிலிருந்த ஆனந்த பிரியா (25), அருணா தேவி (27) லோகேஸ்வரி (17), ஆருஷ் (8), செவின் (3), சார்ஜன் (12) ஆகிய நான்கு குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவ இடத்தில் மல்லாங்கிணறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுவன் பழைய குற்றாலம் வெள்ளத்தில் சிக்கியது எப்படி? மாவட்ட ஆட்சியரின் பதில் என்ன? - Boy Died In Courtallam Flood