தமிழ்நாடு

tamil nadu

“வெள்ள நிவாரணத்தில் அரசுக்கு துணை நிற்போம்” - அண்ணாமலை உறுதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 3:45 PM IST

BJP Annamalai: தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பா.ஜ.க. நிர்வாகிகள் களத்தில் நின்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அனைத்து பகுதிகளிலும் மோடி கிச்சன் திறக்க வேண்டும் என பாஜக தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

சென்னை:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை குறித்து சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழகத்தின் தென் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கெடுத்து நகரத்தில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க. நிர்வாகிகள் களத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அனைத்து பகுதியிலும் மோடி கிச்சன் திறக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தி உள்ளேன்.

மழை கடந்த பிறகும் நிவாரண உதவி செய்ய அரசுடன் பா.ஜ.க. களத்தில் நிற்கும். இது வரலாறு காணாத மழை. முப்படை உதவியை தலைமை செயலாளர் கோரி உள்ளார். சூலூரில் இருந்து இந்திய விமானப்படை உணவு வழங்க கோரி உள்ளனர். மக்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்ய பா.ஜ.க. தயாராக இருக்கிறது. கடலுக்கு செல்ல கூடிய மீனவர்கள் அரசு என்ன சொல்லி இருக்கிறதோ அதை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அதை தொடர்ந்து காசி தமிழ் சங்கம் குறித்து பேசுகையில், “வாரணாசியில் 2வது ஆண்டாக பிரதமர் காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்து உள்ளார். டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து 7 குழுக்கள் காசிக்கு செல்கிறது. முதல் குழுவாக மாணவர் குழு காசி சென்று உள்ளது. ஆசிரியர் குழு காசி செல்கிறது. 1500க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாரணாசிக்கு சொல்கின்றனர். கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் சிறப்பாக நடைபெறுகிறது.

மேடையில் திருக்குறளை புதிதாக 16 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பிரதமர் மோடி வெளியிட்டார். கடந்த ஆண்டு 13 மொழிகளில் வெளியிடப்பட்டது. திருக்குறளை 29 மொழிகளில் காசி சங்கமத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. சங்க கால இலக்கியத்தில் இருந்து 46 நூல்களை பார்வையில்லாதவர்கள் படிக்க வெளியிட்டு உள்ளார்கள்.

பிரதமர் இந்தியில் பேசுவதை நேரடியாக காசி தமிழ் சங்கமத்தில் அனைவரும் நவீன தொழில் நுட்பத்தில் தமிழில் கேட்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் இந்தியை தமிழில் மொழி பெயர்ப்பை அறிமுகம் செய்து வைத்தார். இதை கேட்க ஆச்சரியமான அனுபவமாக இருந்தது. தமிழகத்தில் பிரதமர் பேசுவதை மக்களுக்கு நேரடியாக தமிழிலில் கேட்க கூடிய மாதிரியாக இருந்தது. அடுத்த 15 நாட்கள் காசிக்கு சென்று சங்கமத்தில் பங்கேற்க வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய இடம்பெற்றுள்ளன” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோரம்பள்ளம் குளக்கரையில் உடைப்பு... வெள்ள அபாயத்தில் தூத்துக்குடி!

ABOUT THE AUTHOR

...view details