கந்த சஷ்டி; அரியலூர் பாலதண்டாயுதபாணி கோயிலில் சூரசம்ஹாரம்!
அரியலூர்: கந்தசஷ்டி விழாவையொட்டி, அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று (நவ.18) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, நேற்று பாலதண்டாயுதபாணி கோயில் முருகப்பெருமானுக்கு விஸ்வரூப தீபாராதனையும், உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கஜமுகசூரன், ஆடுதலைசூரன், சிங்கமுகசூரன், தரகாசூரன், பத்மசூரன், மயூராசூரன், சூரபத்மன் என ஏழு உருவங்களைத் தாங்கி வந்த சூரபத்மனை, ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்த முருகப்பெருமான் வேல் கொண்டு அழித்து, வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சூரபத்மன் பல்வேறு உருவங்களில் வந்து முருகப்பெருமானுடன் போரிடும் காட்சி, முருகப்பெருமான் வதம் செய்ய வரும்போது சூரன் தப்பித்து ஓடி ஒளிவது, சூரனை அழித்த பிறகும் மீண்டும் மாற்று உருவங்களைத் தாங்கி போரிட வருவது போன்ற போர் காட்சிகளை பக்தர்கள் தத்ரூபமாக செய்திருந்தனர். முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘அரோகரா’ என்ற கோஷத்துடன் முருகப்பெருமானை தரிசித்தனர்.