லிங்கத்தை சுற்றி வணங்கிய பாம்பு.. பால் ஊற்றி வழிபட்ட மக்கள்!

By

Published : Jul 2, 2023, 9:05 PM IST

thumbnail


திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான விஸ்வேஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கத்தை சுற்றிய பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாம்பிற்கு பால் ஊற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கோட்டைமேடு தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோயில் உள்ளது‌. இந்த கோயில் சில ஆண்டுகளாக வழிபாடு நடத்தப்படாமல் பூட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் பாம்பு ஒன்று செல்வதை கண்ட சிலர் உள்ளே சென்று பார்த்த போது அந்தப் பாம்பு கோயிலில் உள்ள லிங்கத்தை சுற்றியபடி படுத்துக் கொண்டது. இந்த தகவல் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் பரவியது.

பலர் சுவாமியை வணங்குவதற்காக இந்த பாம்பு லிங்கத்தை சுற்றியபடி படுத்திருப்பதாக கூற துவங்கினர். மேலும் பாம்பிற்கு பால் ஊற்றி பூஜை செய்தால் நல்லது எனவும் கூறினர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சுவாமியை சுற்றி படுத்திருந்த பாம்பிற்கு பால் ஊற்றி வணங்கினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு அந்த பாம்பு சிவலிங்கத்தை சுற்றி படுத்திருந்தது. 

பாம்பு வேறு எங்கேனும் சென்று தீங்கு விளைவிக்கக் கூடும் என அஞ்சிய அப்பகுதியினர் சிலர் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் பாம்பு சிவலிங்கத்தை சுற்றி இருந்ததால் அதனை பிடிக்கக்கூடாது என சிலர் தெரிவித்தனர்.

இதனால் தீயணைப்புத் துறையினர் காத்திருக்க துவங்கினர். சுமார் 2 மணி நேரமாக சிவலிங்கத்தை சுற்றி இருந்த அந்தப் பாம்பு அங்கிருந்து ஊர்ந்து செல்ல துவங்கியது. இதனை கண்காணித்து வந்த தாராபுரம் தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் பைப்பிற்குள் அடைத்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். 

மேலும் பல நாட்களாக பூட்டி இருந்த கோயிலுக்குள் தானாகவே நுழைந்த பாம்பு சிவலிங்கத்தை சுற்றி கொடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் பலர் சிவனை வணங்குவதற்காக பாம்பு வந்ததாக கூறியதும் அந்த பாம்பிற்கு பால் ஊற்றிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது வருகிறது. 

மேலும் இதன் காரணமாக ஆண்டு கணக்கில் பராமரிக்கப்படாமல் இருந்த கோவில் தற்போது கலைகட்ட துவங்கி உள்ளது. இச்சம்பவத்துக்கு பின் அப்பகுதியினர் ஏராளமானோர் வந்து செல்வதும் வழிபாடு நடத்துவதுமாக உள்ளனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கூறுகையில் பாம்பு எதேர்ச்சியாக வந்ததாகவும் அதனை பிடித்து செல்லாமல் விட்டால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் எனவும் வனத்துறையினர் தக்க நேரத்தில் வந்து பாம்பை பிடித்து சென்று விட்டதாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.