தமிழகத்தின் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வந்த வெளிநாட்டு மாணவர்கள்; மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 10:30 PM IST

thumbnail

திருநெல்வேலி: தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, கனடா மற்றும் இலங்கை போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் பள்ளி குழந்தைகள் தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு, மரபுகளை அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசு வேர்களை தேடி என்ற திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, பிஜூ தீவுகள், கனடா, இலங்கை மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 58 மாணவர்கள் அடங்கிய முதல் குழு கடந்த 15ஆம் தேதி தமிழகம் வந்தனர். பிறகு மகாபலிபுரம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நகரங்களுக்குச் சென்று தமிழ்நாட்டின் பாரம்பரியம் பண்பாடு உணவுப் பழக்க வழக்கம் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் உள்ளிட்டவற்றைப் பார்த்துவிட்டு, நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு இன்று (ஜன.04) வருகை தந்தனர். அங்கு தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் மேளதாளம் முழங்க அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நெல்லையப்பர் கோயில் ஊழியர்கள் 58 பேரையும் காந்திமதி அம்பாள் சன்னதி, ஆயிரம் கால் மண்டபம், கோயில் பிரகாரத்தில் உள்ள கலைநயம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் சுவாமி நெல்லையப்பர் சன்னதி, தாமிர சபா மண்டபம் உள்ளிட்டவற்றுக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர்.

மேலும், அவர்களுக்கு சிலைகள் குறித்த விளக்கங்களையும் பூஜை முறைகள் குறித்த விளக்கங்களையும் அளித்தனர். தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளை தரிசனம் செய்த மாணவர்கள், கோயிலில் விளக்கேற்றி வழிபாடும் மேற்கொண்டனர்.

இதுமட்டும் அல்லாது, நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபத்திற்குச் சென்று பார்வையிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாற்றையும் கேட்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.