13 அடி தேங்காய்க்குள் விநாயகர் சிலை.. வியப்புடன் விநாயகரை தரிசித்த பொது மக்கள்!
சேலம்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செவ்வாய்பேட்டை பகுதியில் 13 அடி உயரமுள்ள தேங்காய்க்குள் அமைக்கப்பட்ட விநாயகர் சிலையை கண்டு பக்தர்கள் பரவசத்திற்குள்ளாகினர்.
விநாயகர் சதுர்த்தி விழாவானது இன்று (செப். 18) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளிலும் தெருக்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செவ்வாய்ப்பேட்டை எலைட் அசோசியேஷன் சார்பில் தேங்காய்க்குள் விநாயகர் இருப்பது போன்ற சிலை காட்சிப்படுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் இந்த அசோசியேஷன் சார்பில் பல்வேறு விதமாக விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான், இந்த ஆண்டு, செவ்வாய்பேட்டை பகுதி தென்னந்தோப்பிற்குள் 13 அடி உயரமுள்ள தேங்காயில் விநாயகர் இருப்பது போன்று சிலை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயிலின் இரு புறமும், தென்னை ஓலைகள் மற்றும் பல ஆயிரக்கணக்கான தேங்காய்களை வைத்து அலங்கார வளைவுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வடிவிலான விநாயகர் சிலையை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.