ETV Bharat / state

’கருவாடு கூட மீன் ஆகலாம், ஆனால் சசிகலா அதிமுக உறுப்பினராக முடியாது’ - சி.வி.சண்முகம்

author img

By

Published : Jun 7, 2021, 5:33 PM IST

கருவாடு கூட மீன் ஆகலாம் ஆனால் சசிகலா அதிமுக உறுப்பினராக முடியாது
கருவாடு கூட மீன் ஆகலாம் ஆனால் சசிகலா அதிமுக உறுப்பினராக முடியாது

விழுப்புரம்: ”கருவாடு கூட மீன் ஆகலாம், ஆனால் சசிகலா அதிமுக உறுப்பினராக முடியாது” என முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் பாடப் புத்தகத்தில் இடதுசாரிகள் குறித்து தவறான முறையில் சித்தரித்து போடப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயர்க்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது இதுகுறித்து எந்தக் கேள்வியும் எழுப்பாமல் தற்போது இதுபோன்ற கருத்துகளை கூறி வருகிறார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தன. ஆனால் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனாவால் இறந்த சடலத்தை தூக்கி எறியும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதனைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம்

”கரோனாவால் இறந்தவர்களுக்கு பேரிடர் இழப்பு நிதியாக நான்கு லட்ச ரூபாய் வழங்க வேண்டும்” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்பவர்கள் உயிரிழந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. கரோனா நோயாளிகள், உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது.

சசிகலா ஜெயலலிதாவிற்கு உதவியாக வந்தவர் தான், அவருக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் கூட்டிய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று தேர்தல் ஆணையம் தெளிவாகத் தெரிவித்துவிட்டது.

இப்போது சசிகலா என்ன வேஷம் போட்டாலும் அவரது எண்ணம் நிறைவேறாது. கருவாடு கூட மீன் ஆகலாம், ஆனால் இனி எப்போதும் சசிகலா அதிமுக உறுப்பினராகக் கூட வர முடியாது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திட்டங்கள் ஆட்சி மாற்றத்தால் நிறுத்தப்பட்டுள்ளன.

அதிமுக போராடும் நிலையை ஆளும் கட்சி உருவாக்க வேண்டாம். திமுக அமைச்சர்கள் துறை ரீதியான கூட்டம் நடத்துவதற்கு கூட முதலமைச்சர் அனுமதி பெற்று நடத்தும் நிலை தான் தற்போது திமுகவில் உள்ளது. இதுதான் 30 நாள்கள் ஆட்சியின் சாதனை" என்றார்.

இதைபும் படிங்க: ஊரடங்கு தளர்வு - காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.