ETV Bharat / state

விபத்தில் சிக்கிய குடும்பத்தினருக்கு உதவிய ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 8:27 AM IST

Ranipet District Collector
விபத்தில் சிக்கிய குடும்பத்தினருக்கு உதவிய ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர்

Ranipet District Collector: ஆற்காடு அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனைக்கு தனது காரில் அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் செயல் அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதிகளை இணைக்கக்கூடிய பாலாற்றின் மேம்பாலத்தின் மீது சாத்தூர் பகுதியை சேர்ந்த தம்பதியர்களான ரமேஷ்(37), பரிமளா(27) மற்றும் இவர்களது மகளான ஓவியா(7) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக, பின்னால் வந்த ஆட்டோ ஒன்று இவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்திருந்த குடும்பத்தினரான ரமேஷ், பரிமளா, ஓவியா ஆகிய மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் அவ்வழியாக சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி விபத்தில் காயமடைந்த ரமேஷ் பரிமளா குழந்தை ஓவியா உள்ளிட்ட மூன்று நபர்களையும் பத்திரமாக மீட்டார். தொடர்ந்து, தனது காரில் இம்மூன்று பேரையும் ஏற்றிக்கொண்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

மேலும் மருத்துவர்களிடம் காயமடைந்துள்ள மூன்று நபர்களின் உடல்நிலை குறித்து விசாரித்து உரிய சிகிச்சை வழங்கும்படி தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து சென்றுள்ளார். விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டு தனது காரில் ஏற்றுக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்த மாவட்ட ஆட்சியரின் செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, மாவட்ட ஆட்சியர் செய்த உதவி அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கார் டயர் வெடித்து இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.