ETV Bharat / state

202 போக்சோ வழக்குகளில் 59 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் - தென்மண்டல காவல்துறை சாதனை!

author img

By

Published : May 16, 2023, 9:25 AM IST

202 போக்சோ வழக்குகளில் 59 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் - தென்மண்டல காவல்துறை சாதனை!
202 போக்சோ வழக்குகளில் 59 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் - தென்மண்டல காவல்துறை சாதனை!

குழந்தைகள் பாலியல் தொடர்பான 202 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் 59 நாட்களில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து தண்டனை வாங்கிக் கொடுத்து, தென் மண்டல காவல்துறை சாதனைப் புரிந்துள்ளது.

மதுரை: திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் பதிவாகும் காவல் நிலையங்களில் 59 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வகையில், தென் மண்டல காவல்துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

காவல்துறையால் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கின்ற காரணத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க காவல்துறை கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் இந்த வழக்கின் போக்குக் குறித்து அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களோடு தென் மண்டல காவல்துறை தலைவரும், கண்காணிக்கும் வகையில் சிறப்பான நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூகுள் ஸ்பிரட்சீட் மூலமாக வழக்குகள் அனைத்தும் அட்டவணைப்படுத்தப்பட்டு, அந்த வழக்கின் நிலை குறித்து அறியும் வகையில், முதல் 45 நாட்கள் வரை பச்சை வண்ணத்திலும், 46 நாளிலிருந்து 50 நாட்கள் வரை மஞ்சள் வண்ணத்திலும் 51-வது நாளிலிருந்து 59-வது நாட்கள் வரை சிவப்பு வண்ணத்திலும் குறியிட்டுக் காட்டும்.

இதன் அடிப்படையில் வேகமாக காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முடுக்கிவிடப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தொடர்புடைய காவல் நிலையங்களுக்கோ, காவல் அதிகாரிகளுக்கோ அறிவுறுத்தல் செய்யப்படுகிறது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றங்களில் வரும்போது பாதிக்கப்பட்ட தரப்பிற்கு காவல்துறை வாயிலாக செல்பேசி மூலமாக குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. மேலும், வழக்கின் அவ்வப்போதைய நிலை குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகவல் வழங்க தென் மண்டல காவல்துறை உரிய தகவல் தொடர்பு முறையைச் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, வழக்கு விசாரணை வருகின்ற நாட்களை முன்கூட்டியே பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் அவர்களும் அதே நாளில் ஆஜராகி நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு நியாயத்தைப் பதிவு செய்யவும், ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. குழந்தைகள் தொடர்பான இந்த வழக்குகளில் அதிகபட்ச கவனத்தோடும், எச்சரிக்கையோடும் கையாளத் தேவையான பயிற்சிகளும், ஆலோசனை மற்றும் ஒழுங்குமுறைகளும் தென் மண்டல காவல்துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளன என்று ஐஜி அஸ்ரா கர்க் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பத்து தென் மாவட்டங்களில் பதிவான 202 போக்சோ வழக்குகளில் 59 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 91 போக்சோ வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் 39 பேர் விருதுநகர், 25 பேர் திண்டுக்கல், 8 பேர் தூத்துக்குடி, 5 பேர் தென்காசி, 4 பேர் மதுரை, 2 பேர் ராமநாதபுரம், தேனி மற்றும் சிவகங்கையில் தலா 3 பேர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் தலா ஒருவர் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 20 வழக்குகளில் விருதுநகரில் 18, திண்டுக்கல் மற்றும் தேனியில் தலா ஒரு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பேராசிரியர் ஜவகர்நேசனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" : மாநில கல்விக்கொள்கை குழு உறுப்பினர்கள் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.