ETV Bharat / state

"பேராசிரியர் ஜவகர்நேசனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" : மாநில கல்விக்கொள்கை குழு உறுப்பினர்கள் மறுப்பு!

author img

By

Published : May 15, 2023, 10:43 PM IST

மாநில கல்விக்கொள்கை குழு குறித்த பேராசிரியர் ஜவகர்நேசனின் குற்றச்சாட்டுக்குகள் ஆதாரமற்றவை என்றும், குழுவின் பணிகளில் எந்தவித தலையீடும் இல்லை என்றும் அக்குழுவின் உறுப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

ஜவகர்நேசன்
ஜவகர்நேசன்

சென்னை: தமிழ்நாடு மாநிலத்திற்கான தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கல்வி கொள்கை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழுவில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்த பேராசிரியர் ஜவகர் நேசன் கடந்த 10ஆம் தேதி இக்குழுவிலிருந்து விலகினார்.

மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் தலையீடு இருப்பதாகவும், மாநில கல்வி கொள்கை தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி உருவாக்கப்படுவதாகவும் ஜவகர் நேசன் குற்றம் சாட்டியிருந்தார். இக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழுவின் உறுப்பினர்கள் அருணா ரத்தினம், பேராசிரியர் சீனிவாசன், ஜெயஸ்ரீ தாமோதரன் உள்ளிட்டோர் இன்று (மே 15) கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், வெளிப்படைத்தன்மையின்றி செயல்படுவதாகவும் பேராசிரியர் ஜவகர்நேசன் வைத்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அரசு அதிகாரிகள் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க பணிகளில் தலையிடவில்லை, குழு உறுப்பினர்கள் கல்வி சார்ந்த திட்டங்களை மட்டுமே அரசு அதிகாரிகளுடன் விவாதித்துள்ளோம்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில் குழு செயல்படுவதாக ஜவகர்நேசன் வைத்த குற்றச்சாட்டு அர்த்தமற்றது. புத்தகம் சார்ந்த கல்வியாக மட்டுமல்லாமல், மாணவர்கள் மனிதநேயம், சமூக நீதி உள்ளிட்டவற்றையும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டின் நலன் சார்ந்து புதிய மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், குழுவின் உறுப்பினர் மாடசாமி குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசனுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள தகவலில், "கல்வியை எளிய மக்களின் கைகளில் சமூக நீதியுடன் வழங்குவதற்காக நாம் கூடியிருக்கின்றோம். இக்குழுவிற்கு உங்கள் தலைமை ஒப்பற்றது.

ஜனநாயக தன்மை கொண்டது. கல்விக்குழு தொடர்பான இரு பரிந்துரைகளை உங்களிடம் அளிக்க விரும்புகிறேன். ஒன்று ஜவகர் நேசனுக்கு பதிலாக ஆயிஷா நடராஜனை கல்வி குழுவில் சேர்க்கலாம். அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி மாநில கல்விக்குழு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாநில கல்வி குழுவை அச்சுறுத்தும் ஐஏஎஸ் அதிகாரி.. பதவி விலகிய உறுப்பினர் ஜவகர்நேசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.