ETV Bharat / state

கரூரில் மர்ம சத்தம்: பொதுமக்கள் பீதி

author img

By

Published : Dec 15, 2021, 12:05 PM IST

மர்ம சத்ததினால் பீதியான மக்கள்
மர்ம சத்ததினால் பீதியான மக்கள்

கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மர்ம சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

கரூர்: மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாந்தோணிமலை, மண்மங்கலம், ஆத்தூர், புகழூர், வேலாயுதம்பாளையம், காந்திகிராமம், புலியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (டிசம்பர் 14) காலை சுமார் 11.20 மணி அளவில் திடீரென ஏற்பட்ட சத்தமும் அதனால், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில் அதிர்வும் உணரப்பட்டது.

இதனால் வீடுகள், கடைகளிலிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு கடைகள், வீடுகளை விட்டு வெளியே ஓடினர். திடீரென ஏற்பட்ட அதிக சத்தத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று தெரியாமல் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இது குறித்து கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடம் கேட்டபொழுது வெடிச்சத்தம் நிலநடுக்கம் போன்று உணர்ந்ததாகவும், இதனால் வீடுகள், கடைகளை விட்டு வெளியேறி நின்றபடி சுமார் 20 நிமிடம் காத்திருந்ததாகவும் கூறினர். மேலும், சத்தத்தின் அதிர்வானது 15 நிமிடங்கள் எதிரொலிப்புச் சத்தத்துடன் கேட்டதாகப் பொதுமக்கள் கூறினர்.

சத்தத்திற்குக் காரணம்

இது குறித்து கரூர் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் பதில் அளிக்க மறுத்துவிட்டன. கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, க. பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் செயல்பட்டுவருவதால் மிகவும் சக்திவாய்ந்த வெடி மருந்துகளை வைத்து பாறைகளைத் தகர்த்திருக்கலாம் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, இந்தோனேசியாவில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்தியாவின் தென் கடலோரப் பகுதிகளான சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை உருவாக்கிச் சென்றது.

அதேபோல, இந்தாண்டும் நேற்று இந்தோனோசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று தமிழ்நாட்டில் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் சுற்றுப்பகுதிகளில் நில அதிர்வு போன்ற மர்மமான சத்தம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

இதையும் படிங்க: இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இந்தியாவுக்கு பாதிப்பில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.