ETV Bharat / state

வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை எப்போது உயர்த்தப்படும்? - ராமதாஸ் கேள்வி..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 8:45 PM IST

PMK Ramadoss
பாமக ராமதாஸ்

PMK Ramadoss statement: தமிழ்நாட்டிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கும் உதவித்தொகை திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: கர்நாடக அரசு பட்டப்படிப்பை முடித்து 6 மாதங்கள் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது பாராட்டத்தக்கது என என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கர்நாடக அரசு படித்து பட்டம் பெற்று 6 மாதங்களாகியும் வேலை பெறாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதமும், பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதமும் வழங்கும் திட்டம் தான் இதுவாகும்.

இது படித்த இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக்கும் நோக்குடன் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யப்படும் உதவியாகும். படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு போட்டித்தேர்வுகளையும், குடிமைப்பணி தேர்வுகளையும் எழுதுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

அதைப் புரிந்து கொண்டு, அவர்கள் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்காகச் செய்யும் செலவில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஈடுகட்டும் வகையில் பட்டம் பெற்றதிலிருந்து 6 மாதத்தில் தொடங்கி அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவ்வுதவியைக் கர்நாடக அரசு வழங்கவுள்ளது. கர்நாடக அரசின் இந்த தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது.

தமிழ்நாட்டிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இதே போல் மாற்றியமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசோ யாருக்கும் பயனற்ற வகையில், 17 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தையும், கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. தமிழக அரசின் திட்டம் பயனற்ற திட்டமாகும். கர்நாடகத்தில் மாதம் ரூ.3000 வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மாதம் ரூ.600 மட்டுமே, அதாவது அங்கு வழங்கப்படுவதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் தான் இங்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை. மாறாக பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, 12&ஆம் வகுப்பு தேறியவர்களுக்கு ரூ.400 வழங்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் தொகை பட்டதாரிகளுக்கு எவ்வகையிலும் உதவாது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குப் பிந்தைய 17ஆண்டுகளில் உதவித்தொகை உயர்த்தப்பட வில்லை. அப்போது அறிவிக்கப்பட்ட அதே ரூ.600 தான் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் கூட பல்வேறு காரணங்களைக் காட்டி கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவி என்பது அவர்களின் உயர்வுக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவுவதாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் கருநாடகத்தில் இருப்பது போன்று இத்திட்டத்திற்கான நிபந்தனைகளைத் தளர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அத்துடன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தோருக்கு ரூ.1,000, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.2,000, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கும், பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் தலா ரூ.3,000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000, பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5,000 வீதம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; அதன்மூலம் படித்த இளைஞர்களின் வாழ்வில் தமிழக அரசு ஒளி விளக்கேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்ன தான் பிரச்சனை? பயணிகள் தரப்பில் கூறுவது என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.