ETV Bharat / state

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்ன தான் பிரச்சனை? பயணிகள் தரப்பில் கூறுவது என்ன..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 5:55 PM IST

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் சந்திக்கும் சிக்கல் என்ன
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் சந்திக்கும் சிக்கல் என்ன

Kelambakkam Bus stand: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சந்திக்கும் போதிய பேருந்து வசதிகள் இல்லாமை, உணவுப் பொருட்களின் தேவை, கூட்ட நெரிசல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அலசுகிறது, இந்த செய்தித் தொகுப்பு.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்ன தான் பிரச்சனை? பயணிகள் தரப்பில் கூறுவது என்ன..?

சென்னை: கடந்த டிச.30ஆம் தேதி சென்னையில் புதிய பேருந்து முனையம் கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கப்பட்டது. இப்பேருந்து முனையத்திற்கான பணிகள், கடந்த 2019ஆம் ஆண்டு ரூ.397.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, துவங்கப்பட்டன.

ஆனால் கரோனா பெருந்தொற்று, மழை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இதன் கட்டுமான பணிகளின் அவ்வப்போது இடையூறு ஏற்பட்டது. இதன் பின்னர், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, கடந்த டிச.30 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்நிலையில், சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக, பல்வேறு அம்சங்களைக் கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டாலும், பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களைப் பயணிகள் முன்வைத்து வருகின்றனர்.

கிளாம்பாக்கத்திற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை?: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அதிக பேருந்துகளும், மெட்ரோ ரயில் வசதிகளும் இருப்பதால் அங்கு எளிமையாகச் சென்றுவந்ததாகப் பொதுமக்கள் பலரும் கூறிவருகின்றனர். ஆனால், கிளாம்பாக்கத்திற்கு செல்வது சிரமாக இருப்பதாகப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றைத் தாண்டியும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்காக வண்டலூர் வரை புறநகர் மின்சார ரயிலில் வந்தாலும், அங்கிருந்து அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோ மூலமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், பயணத்திற்கான கட்டண செலவு அதிகரிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகப் பயணிகளின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே, கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட விரைவு பேருந்துகளும் புறப்பட்டுச் செல்கின்றன.

எகிறிய உணவுப் பொருட்களின் விலையால் விழிபிதுங்கும் மக்கள்: இதனிடையே கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும், முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளும் இங்கு வந்து செல்வதால் அங்கு ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலால் பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய பயணி செல்வ பாண்டியன், 'சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்குச் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 3 மாநகர பேருந்துகள் மாறி வந்துள்ளேன். இங்கு 2 உணவகங்கள் மட்டுமே உள்ள நிலையில், அங்கும் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வேறு வழியில்லாமல், அதையும் சாப்பிடுகிறோம்' என்று கூறினார்.

டெண்டர் பெற்ற பெருநிறுவனங்களின் செயலால் புலம்பும் மக்கள்: மேலும் அஜித் குமார் எனும் பயணி கூறுகையில், 'சாப்பாட்டுக்குச் செலவு செய்வதா? பேருந்து கட்டணம் கட்டுவதா? என்று தெரியவில்லை. பெரும் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. அவைகள் இஷ்டத்துக்கு விலை வைத்து உணவை விற்கின்றனர்' என்றார்.

தென் மாவட்ட பயணி வினிஷ் என்பவர் கூறுகையில், 'காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பேருந்து எதுவும் வரவில்லை. இங்கு நிற்கும் அனைத்து பேருந்துகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்தாண்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்றபோது, சற்று எளிமையாக இருந்தது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சரியான வழிமுறை இல்லை; குறிப்பாக, இங்குள்ள அதிகாரிகளே தெளிவாக இல்லை' என குற்றம்சாட்டினார்.

குழப்பங்களுக்கு அதிகாரிகள் கூறிய பதிலென்ன? முன்னதாக, இங்கு ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொங்கல் முன்னிட்டு திறக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டு வருகிறது. மக்களிடமும் பயணிகளிடமும் குறைகள் கேட்டறிந்துள்ளோம். அதற்கான ஏற்பாடுகளைப் பொங்கல் முடிந்தவுடன் விரைவாகச் செய்து முடிக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.

அதேபோல போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து முதலாவதாகப் பொங்கல் பண்டிகைக்குப் பேருந்துகள் இயக்கப்படுவதால் சிறு பிரச்சனைகள், குழப்பங்கள் இருக்கும். அவை விரைவில் தீர்க்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

கிளாம்பக்கம் to சென்னைக்குப் பேருந்து சேவை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை கோயம்பேட்டிற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும்; தாம்பரம், கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றன. பின்னர், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோயம்பேட்டிற்கு 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோயம்பேட்டிற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றன. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை கோயம்பேட்டிற்கு 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு 8 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், சென்னை பிராட்வே செல்வதற்கு 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், திருவான்மியூருக்கு 8 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், தி.நகர் மற்றும் பூந்தமல்லிக்கு 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், ஐயப்பன்தாங்கலுக்கு 8 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுவதாகப் போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குளறுபடியைச் சமாளிக்க அடுத்த திட்டம் மெட்ரோ ரயில்?: விரைவில், இப்பகுதியில் புறநகர் மின்சார ரயில் நிலையமும், மெட்ரோ ரயில் நிலையமும் கொண்டுவரப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயணிகள் சுட்டிக்காட்டும் குறைகளையும் விரைவாகத் தீர்க்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை டூ அயோத்தி விமானம்:அயோத்தி ராமர் கோயிலுக்கு போறீங்களா..டிக்கெட் எவ்வளவு தெரியுமா..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.