ETV Bharat / state

மக்கள் தீர்ப்பு திமுகவுக்கு பாடமாக அமையும் - ஓபிஎஸ் பரப்புரை

author img

By

Published : Feb 10, 2022, 6:42 AM IST

'மக்கள் தீர்ப்பு திமுகவுக்கு பாடமாக அமையும்' - ஓபிஎஸ்
'மக்கள் தீர்ப்பு திமுகவுக்கு பாடமாக அமையும்' - ஓபிஎஸ்

உள்ளாட்சி தேர்தலில் மக்களின் தீர்ப்பு திமுகவுக்கு பாடமாக அமையும் என சேலத்தில் நகர்ப்புற உள்ளாடி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சேலம்: நெய்க்காரப்பட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று (பிப்.9) நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அப்படியே அடிபிறழாமல் செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் தொலைநோக்கு பார்வையுடன் வாக்குறுதிகளை தருவார். அதை நிறைவேற்றியும் தந்தார். மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தந்தார்.

ஏழைகளுக்கு வீடுகள், திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கம் என்று வழங்கியவர் ஜெயலலிதா. மகப்பேறு நிதியுதவியை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி தந்தார். கல்வி மேம்பாட்டிற்கு திட்டங்களை வகுத்தார். உலக தொழில் முதலீடுகளை தமிழ்நாடு கொண்டு வந்தார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மின்தடை இல்லை. அதிமுக ஆட்சி சிறப்பாக நடந்தது.

நடைபெற்று முடிந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சி அமைத்தது. அவர்களது 8 மாத கால ஆட்சி பல்வேறு குளறுபடிகளுடன் நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார் ஸ்டாலின். இருப்பினும் இதுவரை ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான், அதிமுக நிலைப்பாடு.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்தது அதிமுக அரசு. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தி, தஞ்சை மண்டலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். கரோனா காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அதிமுக அரசு செயல்பட்டது.

குப்பை பொங்கல் பரிசு

அதிமுகவினர் மக்களுக்கு நிவாரணம் வழங்கினர். திமுக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை. கொடுக்கின்ற கட்சி அதிமுக, எடுக்கின்ற கட்சி திமுக. பொங்கல் பரிசு தொகுப்பு அதிமுக ஆட்சியில் தரமாக வழங்கப்பட்டது. இப்போது திமுக ஆட்சியில் பொங்கல் பரிசை குப்பையாக கொடுத்தார்கள்.

மக்கள் வெகுண்டு எழுந்து, அதிமுக ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்று தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதிமுகவுக்கு சாதகமான சூழல் உள்ளது. மக்கள் அளிக்கும் தீர்ப்பு திமுகவுக்கு பாடமாக அமையும். ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்கள் அதிமுகவை ஆதரித்து தீர்ப்பு வழங்க உள்ளனர். இது அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்களுக்கான தேர்தல். ஜெயலலிதா கூறியபடி அவருக்கு பின்னாலும், 100 ஆண்டுகள் அதிமுக ஆளவேண்டும் " என்றார்.

இதையும் படிங்க: "வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்" - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.