ETV Bharat / state

தேவர் குருபூஜை: செல்வாக்கை ஓபிஎஸ் நிரூபித்தாரா? ஈபிஎஸ் ஏன் பசும்பொன்னிற்கு செல்லவில்லை?

author img

By

Published : Oct 31, 2022, 8:17 PM IST

தேவர் குருபூஜை
தேவர் குருபூஜை

தேவர் குருபூஜையில் தன்னுடைய செல்வாக்கை ஓபிஎஸ் நிரூபித்தாரா என்பது குறித்தும், ஈபிஎஸ் பசும்பொன்னிற்கு ஏன் செல்லவில்லை என்பது குறித்தான ஒரு தொகுப்பை காணலாம்.

சென்னை: ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என பிரிந்தனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருத்தவரை சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு கட்சி செயல்பட்டது. ஆனால் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே தலைமை பொறுப்பை அடைவதற்கான யுத்தம் ஆரம்பித்தது. இதில் ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் கனிசமாக இருக்கூடிய தேவர் சமூகத்தை சேர்ந்தவர். ஈபிஎஸ் கொங்கு மண்டலத்தில் கனிசமாக இருக்க கூடிய கொங்கு வேலாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். தற்போது இது அதிமுகவில் சாதிய மோதலை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்த போது முக்குலத்தோர் மற்றும் கொங்கு வேலாளர் கவுண்டர் சமுதாயம் அவருக்கு பக்க பலமாக இருந்தனர். தற்போது இரண்டு சமுதாயத்தில் இருந்தும் தனித்தனியாக தலைவர்கள் உருவாகி இருக்கின்றனர். ஜெயலலிதா அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருந்த போது கொங்கு மண்டல மக்களின் ஆதரவு இருந்தது. ஜெயலலிதாவின் தோழியாக சசிகலா இருந்ததால் முக்குலத்தோர் சமுதாய மக்களின் ஆதரவும் தென் மாவட்டங்களில் இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவை தொடர்ந்து களம் மாறியுள்ளது.

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு வர முனைப்பு காட்டும் ஈபிஎஸ்சை, ஒரு சமுதாய தலைவராக சித்தரிப்பதை அவர் விரும்பவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் அதிமுகவின் 90% நிர்வாகிகள் ஈபிஎஸ் பக்கம் உள்ளனர். ஆனால் மிகவும் குறைவான ஆதரவு கொண்ட ஓபிஎஸ், எப்படியாவது தானும் செல்வாக்கு மிக்க தலைவர் தான் என்ற செயலில் இறங்கியுள்ளார். இதற்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 60வது குருபூஜையை ஓபிஎஸ் பயன்படுத்தி கொண்டார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அதிமுக சார்பாக பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 14 கிலோ கொண்ட தங்க கவசம் வழங்கினார். இதை வருடம் வருடம் அக்.30ஆம் தேதி அதிமுகவின் பொருளாளர் அணிவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஒற்றை தலைமை பிரச்சனையால் யார் அணிவது என்ற மோதல் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினரிடையே ஏற்பட்டது. இறுதியாக நீதிமன்றத்தின் மூலம் மாவட்ட வருவாய்துறை அதிகாரி தங்க கவசத்தை அணிவிக்க தீர்ப்பு வந்தது. இதன் காரணமாக ஈபிஎஸ் பசும்பொன் செல்வதை தவிர்த்து விட்டார். மேலும் ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கியதால் தென்மாவட்டங்களில் ஈபிஎஸ்க்கு எதிரான ஒரு தோற்றம் இருக்கிறது. இதனால் அங்கு சென்றால் பிரச்சனை ஏற்படும். அதன் மூலம் ஓபிஎஸ் தரப்பினர் மிகப்பெரிய அரசியல் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என ஈபிஎஸ் பசும்பொன் செல்வதை தவிர்த்துள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ஈபிஎஸ் பசும்பொன்னிற்கு செல்லாததை பயன்படுத்தி அவரது எதிர்பாளர்கள் தேவர் சமுதாய மக்களுக்கு எதிரானவர் இவர் என சித்தரிக்கும் வேலைகளில் இறங்கினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓபிஎஸ் பசும்பொன்னிற்கு சென்றுள்ளார். மேலும் தேவர் ஜெயந்தியை தவிர்த்து மற்ற முக்கிய நாட்களில் தேவர் சிலைக்கு அணிந்து கொள்ளும் வகையில் 10 கிலோ 400 கிராம் கொண்ட வெள்ளி கவசத்தை ஓபிஎஸ் வழங்கியுள்ளார். இதனால் தேவர் சமுதாய மக்களின் செல்வாக்கை கனிசமாக கவர்ந்துள்ளார் என கூறப்படுகிறது. ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுகவின் ஒற்றை தலைமை ஆகிவிட வேண்டும் என தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மிக முக்கிய பொறுப்புகளை ஈபிஎஸ் வழங்கினார். அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் தேவர் ஜெயந்தியில் ஓபிஎஸ் அணியை எதிர்கொள்ள இவர்களால் முடியவில்லை என்றே கூறப்பட்டது. இப்படி அதிமுகவின் ஒற்றை தலைமைக்கான அதிகார யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தேவர் ஜெயந்தி மூலம் ஈபிஎஸ் அணிக்கு ஓபிஎஸ் பதில் கொடுத்துள்ளார். இதனால் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தேவர்
தேவர்

இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "கடந்த காலங்களில் ஜெயலலிதா அவர்கள் கூட பசும்பொன் செல்லாமல் சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார். அதே போன்றுதான் தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்" என விளக்கமளித்தார். மேலும் பசும்பொன்னிற்கு ஈபிஎஸ் செல்லாதது குறித்து பேசிய அதிமுகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி, "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வராத பழனிசாமிக்கு தென்மாவட்ட மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவது என்பது ஒரு அரசியல். அந்த அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பூசலை ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரண்டு அணிகளும் வெளிப்படுத்தியுள்ளனர். இதில் ஓபிஎஸ் முக்குலோதோர் சமுகம் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலில் ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபித்தாரா என்பதை இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த நிகழ்வுகளை பொறுத்தது" என அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 'நேர்மையாக இருப்பதென்பது அவ்வளவு எளிதல்ல' - டிஜிபி சைலேந்திர பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.