ETV Bharat / sports

Shubman Gill: சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் தவறவிட்டது ஏன்? சுப்மன் கில் பதில் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 12:36 PM IST

Shubman Gill
Shubman Gill

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பு குறித்து இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை: ஐசிசி உலகக் கோப்பை தொடரில் முதல் அரையிறுதிச் சுற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று (நவ.15) நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 48.5 ஓவர்கள் முடிவில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில், இந்திய அணியின் சார்பாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஷ் ஐயர் 105 ரன்களையும் குவித்தனர்.

ஆனால், ஓப்பனராக களமிறங்கி சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 79 ரன்கள் எடுத்து இருந்தபோது தசைபிடிப்பு காரணமாக போட்டியில் இருந்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இதனால் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், அதை சுப்மன் கில் தவறவிட்டுவிட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து சுப்மன் கில் பேசுகையில் “ஒவ்வொரு முறையும் விராட் கோலி களமிறங்கும்போது பல சாதனைகளை படைத்து வருகிறார்.

அவரின் திறமைகளைக் காட்டிலும் ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அவர் இதை தொடர்ந்து செய்து வரும்போது எங்களுக்கும் அது ஊக்கமளிக்கின்றது.

நாங்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இணைந்து விளையாடி வருகிறோம். அதனால் ஒவ்வொரு போட்டியிலும் எங்களுடைய பணி என்ன என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இந்திய அணியின் பந்து வீச்சை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. போட்டியின்போது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தால், சராசரிக்குக் குறைவான ஸ்கோரை நிர்ணயிக்க வைக்கிறார்கள். இரண்டாவது பவுலிங் செய்தால், சிறப்பாக பந்து வீசி டிஃபெண்ட் செய்து விடுகிறார்கள்.

கேப்டன் ரோகித் சர்மாவுடன் பேட்டிங் செய்யும்போது நாம் எந்த அழுத்தத்திலும் இருக்கத் தேவையில்லை. எதிர் முனையில் அவருக்கு ஆதரவாக நின்றால் போதும். உண்மையில் எனக்கு தசைப்பிடிப்பு ஏற்படவில்லை என்றால், நான் 100 ரன்களை எடுத்து இருப்பேன்.

ஆனால் நான் சதம் அடித்தேனா, இல்லையா என்பது குறித்து நான் கவலை கொள்ளவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிராக 400 ரன்களை குவித்து விட வேண்டும் என நினைத்தோம், அதை நிறைவேற்றியுள்ளோம். அணிக்குத் தேவையான இலக்கு அடிக்கப்பட்டதா என்பதுதான் முக்கியம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சில வாய்ப்புகளை தவற விட்டோம்.. வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்த ரோகித் சர்மா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.