ETV Bharat / international

மனித குலம் முன்னெப்போதும் பார்த்திராத அதிசயம் - ஆதி பிரபஞ்சத்தை படம் பிடித்த தொலைநோக்கி

author img

By

Published : Jul 12, 2022, 7:25 PM IST

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தின் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வண்ணப்படம் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வாஷிங்டன் (அமெரிக்கா): நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தை படம் எடுத்த புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று வெளியிட்டார். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படம் இதுவாகும். அந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் நிரம்பியுள்ளன. விஞ்ஞானிகள் புகைப்படத்தை கண்டு ஆச்சரியத்தை வெளிபடுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கியது. சுமார் 10 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி கடந்த டிசம்பர் மாதம் தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து 1 மில்லியன் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜோ பைடன் பெருமிதம்

இந்தநிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. அதாவது, 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சம் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியது என்று கூறப்படுகிறது நிலையில் இந்த படம் 13 பில்லியன் ஆண்டுகளில் இருந்த பிரபஞ்சத்தின் ஒளியை படம் எடுத்திருக்கிறது. கிட்டதிட்ட இது அந்த காலகட்டதில் இருந்த பிரபஞ்சம் என்று கூறப்படுகிறது. இதுவரை இதுபோன்ற புகைப்படம் எடுக்கவில்லை. இந்த படம் பிரபஞ்சத்தின் ஆழமான தோற்றத்தை காண்பிக்கிறது.

வண்ணப்படத்தை வெளியிட்டு அதிபர் ஜோ பைடன் கூறுகையில், "13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக உருவான மிகப் பழமையான ஒளி" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். "நூற்றுக்கணக்கான புள்ளிகள், கோடுகள், சுருள்கள், வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு சுழல்கள் கொண்ட இந்தப்படம் 'பிரபஞ்சத்தின் ஒரு சிறிய புள்ளி'" என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.

அதேவேளையில் ஹார்வர்ட் வானியலாளர் டிமிடர் சசெலோவ் கூறுகையில், இன்று நாம் பார்த்தது ஆரம்பகால பிரபஞ்சம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் மிக அழகாக உள்ளது என்றும் பல நாட்கள் காத்திருந்ததற்கு பலன் என்றும் தெரிவித்தார்.

உண்மையில் 13 பில்லியன் ஆண்டுகள் முன்பு இருந்த பிரபஞ்ச ஒளி?

உண்மையில் இந்த படம் 13 பில்லியன் ஆண்டுகள் முன்பு இருந்த பிரபஞ்சத்தின் ஒளியா என்பதற்கு நாசா எந்த மதிப்பீட்டையும் தெரிவிக்கவில்லை. கணக்கீடு செய்ய நேரம் எடுக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த படத்தில் மனிதகுலம் இதுவரை கண்டிராத விண்மீன்கள் உள்ளது என்றும் மிகவும் பழமையானது என்றும் கூறுகின்றனர். பிக் பேங் அதாவது பெருவெடிபிற்குப் பிறகு 500 மில்லியன் அல்லது 600 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

கலிபோர்னியா பல்கலைக்கழக சாண்டா குரூஸ், வானியற்பியல் விஞ்ஞானி கார்த் இல்லிங்வொர்த் புகைப்படம் குறித்து கூறுகையில், "இதுவரை கண்டிராத ஒன்று உள்ளது, அது அந்த சிறிய சிவப்பு புள்ளிகள். இது கண்கவர் மற்றும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த தொலைநோக்கி மூலம் இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்" என்று தெரிவித்தனர்.

இந்த தொலைநோக்கி அனுப்பபட்டதற்கான நோக்கம், சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தை பற்றி அறிந்துகொள்வதற்கும், சூரிய குடும்பம், நெருக்கமான அண்ட பொருட்களை துல்லியமாக அறிந்து கொள்ளவதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளுவதற்கு கடினமாக இருந்தாலும், விஞ்ஞானிகளுக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய வண்ணப்படம் நிச்சயம் ஒரு பொக்கிஷம் தான். மனிதகுல அறிவியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாளாகும். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த மேலும் சில புகைப்படங்களை நாசா இன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

  • The first full-colour image from NASA's James Webb Space Telescope reveals the deepest ever view of the universe to date. It shows galaxies once invisible to us

    (Source: NASA) pic.twitter.com/Kwk79D1yWr

    — ANI (@ANI) July 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.