ETV Bharat / state

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்! - VIKRAVANDI DMK MLA PUGAZHENTHI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 1:16 PM IST

MLA Pugazhenthi Body Was Cremated
MLA Pugazhenthi Body Was Cremated

Vikravandi MLA Pugazhenthi: மறைந்த விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இவர், கடந்த 20 நாட்களாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஏப்.5) விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதலமைச்சர் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்வதற்காக வந்தபோது மயக்கம் அடைந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சூழலில், நேற்று (ஏப்.06) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், புகழேந்தியின் உடல் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை அடுத்து, அங்கு திரளான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா ஆகியோரை ஆதரித்து, நேற்று (ஏப்.06) தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பரப்புரைக் கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து நேரடியாக காரில் விழுப்புரத்திற்கு வந்தார்.

அங்கு, கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தியின் உடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

இதனை அடுத்து, உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக, அவருடைய பூர்வீக ஊரான பிடாகம் அருகே உள்ள அத்தியூர் பகுதியில் அமைந்துள்ள திருவாதியில் அமைந்துள்ள அவருடைய சொந்த வீட்டில் உடல் வைக்கப்பட்டது.

அங்கு இன்று (ஏப்.07) அதிகாலையில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் வந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், மறைந்த எம்.எல்.ஏ புகழேந்தியின் குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டு, அவரது உடல் இன்று (ஏப்.07) காலை 11.23 மணியளவில் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் புகழேந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஏ.சி.சண்முகத்தின் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.