ETV Bharat / state

போதைப் பொருள் கடத்தல் விவகாரம்; ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 7:40 PM IST

Drugs Issue
Drugs Issue

Drugs Issue: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு உடந்தையாகச் செயல்பட்ட சதானந்தத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கிற்கு உடந்தையாக இருந்த சதானந்தம் என்பவரை நேற்று முன்தினம்(மார்ச்.12) இரவு சென்னையில் வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர். அங்கு ஜாபர் சாதிக், சதானந்தம் ஆகிய இருவரையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியது.

மேலும், சதானந்தம் வேலை செய்து வந்த ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான சென்னையில் உள்ள குடோனில் இன்று காலை முதல் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் சதானந்தத்தை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக சதானந்தம் செயல்பட்டு உள்ளார். அவரிடம் விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிபதியிடம் கோரிக்கை வைத்து மனுத் தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் சதானந்தத்திற்கு ஒரு நாள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் சதானந்தத்தை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த போதைப் பொருள் கடத்தலில் யார் யாருக்கு எவ்வளவு போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்டது, எங்கெல்லாம் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் எல்லாம் சதானந்தத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதானந்தத்திடம் நடத்தப்படும் விசாரணையில் இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் யாரெல்லாம் பின்னணியில் உள்ளார்கள், யாருக்கெல்லாம் இதில் சம்பந்தம் உள்ளது போன்ற விவரங்களைப் பெற்று, அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் எங்கெல்லாம் போதைப் பொருட்களை வைத்துக் கைமாற்றினார்கள், வெளிநாடுகளுக்குக் கடத்திருக்கிறார்களா போன்ற விவரங்களையும் சேகரித்து அந்த இடங்களிலும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தாளவாடிக்கு இன்று முதல் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.