ETV Bharat / state

தாளவாடிக்கு இன்று முதல் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 6:59 PM IST

Thalavadi free bus: தாளவாடி மலைப்பகுதி கிராமங்களுக்கு முதன்முறையாக கட்டணமில்லா இலவச பேருந்து சேவையை நீலகிரி எம்பி ஆ.ராசா துவக்கி வைத்தார்.

thalavadi free bus
thalavadi free bus

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என தாளவாடி மலை கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, மலைப்பகுதிகளுக்கு இலவச பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு இலவச பேருந்து சேவையை அவர் துவக்கி வைத்தார்.

இதையடுத்து, தாளவாடி மலைப்பகுதிக்கும் இலவச பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தாளவாடி மலைவாழ் கிராம மக்களுக்கு மகளிர் பயன்பெறும் வகையில், முதன்முறையாக கட்டணமில்லா இலவச பேருந்து சேவையினை நீலகிரி எம்பி ஆ.ராசா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு ஆ.ராசா இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த இலவச பேருந்து சேவையானது தாளவாடி பேருந்து நிலையத்திலிருந்து சூசைபுரம், அருள்வாடி மற்றும் அரசு கலைக்கல்லூரி வழியாக பனகள்ளி உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து எம்பி ஆ.ராசா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி, மலைப்பகுதி கிராமங்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தாளவாடி மலைப்பகுதிக்கு இன்று இலவச பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பேருந்து சேவை கடம்பூர் மலைப்பகுதிக்கும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எந்தெந்த தொகுதிகள்? தொடரும் சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.