ETV Bharat / health

மூளையைத் தின்னும் கொடிய நோய்.. மீண்டு வர வழியில்லையா?- மருத்துவர் கூறுவது என்ன? - Amoebic brain fever disease

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 7:31 PM IST

Amoebic brain fever: அமீபிக் மூளைக்காய்ச்சல் என்னும் மூளையை அரிக்கும் நோய் தொற்று சமீபத்தில் மக்களிடையை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த நோய் குறித்து நரம்பியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீவித்யா கூறியுள்ளதை இக்கட்டுரையில் காணலாம்.

மூளை போன்ற் கோப்புப்படம், நரம்பியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீவித்யா
மூளை போன்ற கோப்புப்படம், நரம்பியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீவித்யா (PHOTO CREDITS- ETV BHARAT TAMIL NADU)

சென்னை: மனிதனின் உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது மூளை. ஆறடி ஆள் என்றாலும், ஓரடி விலங்கு என்றாலும் அவற்றை நடமாடச் செய்வது மூளையின் செயல்பாடுதான். அப்படிப்பட்ட மூளையில் அமீபா என்னும் நுண்ணுயிரி ஏற்படுத்தும் மூளைக் காய்ச்சல் தொற்றால் மூளை செயலிழந்து, மனிதனின் உயிரைப் பறிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

நரம்பியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீவித்யா பேட்டி (VIDEO CREDITS-ETV BHARAT TAMIL NADU)

சமீபத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி அமீபிக் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தை உலுக்கியது. இச்சம்பவத்தை தொடர்ந்து, அமீபிக் மூளைக்காய்ச்சல் குறித்து பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், அமீபிக் மூளைக்காய்ச்சல் நோய் ஒரு அரிய வகை நோய் மற்றும் எளிதில் குணப்படுத்த முடியாத நோய் என ரீலா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீவித்யா கூறியுள்ளார்.

அமீபா என்றால் என்ன? அமீபா என்பவை நீரில் வாழும் ஒற்றை செல் உயிரினமாகும். இந்த அமீபாக்கள் அதன் வாழ்விடம் மற்றும் தன்மையினால் பல்வேறு வகைகளாக உள்ளன. இதில் நெக்லேரியா ஃபோலேரியா (Naegleria fowleri) வகையான அமீபா இந்த மூளைக்காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்திகிறது. இந்த நோய்த்தொற்று பாதிப்பை ’முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ (primary amebic meningoencephalitis) என அழைக்கின்றனர். மேலும், இந்த அமீபாக்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டதினால், நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வாய்ப்பு குறைவாக உள்ளாதாகவும் மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

நோய் தொற்றின் அறிகுறிகள்: இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் தலைவலி, வாந்தி, கண் மங்கலாகுதல், சில நேரத்தில் கண்ணைத் திறக்க முடியாமல் போவது போன்ற அறிகுறிகள் ஐந்து நாட்களில் தென்பட தொடங்குகிறது. இதைக் கண்டறியாமல் விட்டுவிட்டால் இரண்டு வாரத்தில் பாதிப்பு தீவிரம் அடைகிறது. மேலும், நோய் பாதிப்பு தீவரமாகும்போது வலிப்பு நோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாகவும், அவ்வாறு வலிப்பு நோய் வந்தால் பின் நோய் பாதிப்பின் உச்சகட்டமாக கோமா நிலை ஏற்படுவதுடன் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, நோய் பாதிப்பை விரைவில் கண்டறிவது அவசியமானதாக இருக்கிறது.

வரும் முன் காப்போம்: இந்த பாதிப்பை ஏற்படுத்தும் அமீபாக்கள் இதமான நீரில் வாழ்பவை. எனவே, கோடை காலத்தில்தான் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த வகை அமீபாக்களின் நோய் தொற்றிலிருந்து இருந்து தப்பிக்க, குறிப்பாக கோடை காலத்தில் பொது நீச்சல் குளங்கள், கண்மாய்கள், ஏரிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் நீச்சலுக்காக பயன்படுத்தப்படும் ’மூக்குகிலிப்புகளை’ அணிந்து கொள்வது அவசியம். மேலும் உள் நீச்சல் அடிகாமல் சற்று தலையை தண்ணீருக்கு வெளியே வைத்து நீச்சல் அடிப்பதனால், குளிக்கும் போது தண்ணீர் மூக்குக்குள் போவதை தவிர்க்க முடியும்.

உடலுக்குள் வந்த அமீபா என்ன செய்கிறது? நீச்சல் குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் போன்ற நீர்த்தேக்க பகுதிகளில், கோடை காலத்தின் இதமான நீரில் இந்த அமீபாக்கள் பெரும்பாலும் வாழ்கிறது. ஒருவர் நீச்சல் அடிக்கும் போதோ அல்லது தண்ணீருக்குள் இருக்கும் போதோ அவரது மூக்கின் உள்பகுதியில் இருக்கும் ஈரப்பசைவு எனப்படும் மியோகசோ லயனின் (Mucous linen) வழியாக மூளைக்குச் செல்கிறது. பின் மூளையை அரித்து திண்ணுவதால் மூளையைச் செயலிழக்கச் செய்து மனிதனை உயிரிழக்கச் செய்கிறது.

மீண்டும் வர வாய்ப்பு உள்ளதா? இந்த நோய் ஏற்ப்பட்டது போல் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று அறிவுரை பெறுவதுடன் பிசிஅர் சோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த சோதனையில் ஒருவரின் முதுகு தண்டில் இருக்கும் உடல் நீரில் ஏதேனும் அமீபிக் தொற்று உள்ளதா என கண்டறிவார்கள். மேலும், இவற்றை கண்டறிய மட்டுமே வழிகள் உள்ள நிலையில், நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வர குறைந்த வாய்ப்பே இருக்கின்றது, அதாவது பத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் நல்வழிப்படுத்த முடியுமா? UNICEF சொல்லும் அற்புத வழிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.