ETV Bharat / health

குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் நல்வழிப்படுத்த முடியுமா? UNICEF சொல்லும் அற்புத வழிகள்! - Gentle PARENTING TIPS

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 7:51 PM IST

Updated : May 31, 2024, 10:17 AM IST

குழந்தைகளை ஆரோக்கியமான வழியில் எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் குழந்தை மற்றும் குடும்ப சமூகப் பணியின் பேராசிரியரான லூசி க்ளூவர் கூறுவதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

File photo of child with parents
பெற்றோருடன் குழந்தை கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. பெற்றோரின் வளர்ப்பிலேயே குழந்தையின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. இன்றைய நவீன
யுகத்தில் குழந்தைகளை கையாள்வது இளம் தலைமுறை பெற்றோருக்கு பெரும் சவாலாக இருக்கும் சூழலில், சமீபத்தில் இளம் தாய் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று பேசுபொருளானது.

மால் ஒன்றுக்கு தன் குழந்தையுடன் அவர் சென்றிருந்தபோது, அங்கு 12,000 ரூபாய் மதிப்பிலான வாசனைத் திரவிய பாட்டிலை குழந்தை உடைத்துவிடுகிறது. ஆனால் அதற்காக தன் குழந்தையை திட்டவில்லை என்று அந்த இளம்பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தன் பிள்ளை மீதான அந்த தாயின் கருணைக்கு வரவேற்பு கிடைத்த அதேசமயம். தவறு செய்யும் பிள்ளையை கண்டிப்பது எப்படி என விவாதிக்கத் தொடங்கினர்.

உண்மையில் குழந்தை வளர்ப்பு எனும் கலையை பெற்றோர் எவ்வாறு கைகொள்வது? யுனிசெஃப் அமைப்பின்(United Nations Children's Fund) வழிகாட்டுதல் என்ன? என்பது குறித்தும், குழந்தைகளை ஆரோக்கியமான வழியில் எவ்வாறு நல்வழிபடுத்துவது என்பது பற்றியும் எடுத்துரைக்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் குழந்தை மற்றும் குடும்ப சமூகப் பணியின் பேராசிரியரான லூசி க்ளூவர்.

பிறந்த குழந்தைகளை விட பள்ளிப்பருவத்தில் இருக்கும் குழந்தைகளை சமாளிப்பதும், அவர்களை நல்வழிப்படுத்துவதும் மிகவும் கடினமானதாக இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். குழந்தைகளும் கோபம், தனிமை, குழப்ப உணர்வு உள்ளிட்ட உணர்வுகளை எதிர்கொள்கின்றனர். அந்த சமயத்தில், “சிறுவயதிலேயே உனக்கென்ன கோபம், தனிமை, குழப்பம்?” என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது.

குழந்தைகள் பெற்றோர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை செய்யும்போது, அவர்களிடம் வன்முறையில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற சமயங்களில் குழந்தைகளிடம் கத்துவது, அவர்களை அடிப்பது ஒருபோதும் பயன் தராது. பெற்றோர்கள் இப்படி நடந்து கொள்வதால் பிள்ளைகள் மன அழுத்தம், இதய நோய், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு, போதைப்பொருட்களுக்கு ஆளாவது, பள்ளியில் இருந்து இடை நிற்றல், தற்கொலை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பேராசிரியரான லூசி க்ளூவர் எச்சரிக்கிறார்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் பாசிட்டிவ்வாக நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள, இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், பிள்ளைகளை பெற்றோர் எவ்வாறு புத்திசாலித்தனமாக வளர்ப்பது என்பது குறித்து சில வழிமுறைகளையும் கூறுகிறார்.

குழந்தைகளிடம் நேரம் செலவிடுங்கள்: எந்த ஒரு உறவையும் வலுப்படுத்துவதற்கு அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களிடம் முகம் கொடுத்து உரையாட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்களாவது அவர்களுடன் கலந்துரையாடலாம். அவர்களுடன் இணைந்து பாட்டு பாடலாம்; ஆடலாம்.

குழந்தைகளை பாராட்டுங்கள்: பெற்றோர்கள் தங்களது குழந்தையின் நடத்தையில் அதிக கவனம் செலுத்தி, அவர்களின் தவறுகளை கண்டிப்பது போல, அவர்கள் ஏதேனும் சிறிய உதவியை செய்தால் கூட அவர்களை புகழ்ந்து பேசுங்கள். அவர்கள் செய்யும் சிறு சிறு நற்செயல்களையும் புகழ்ந்து பேச வேண்டும். குழந்தைகள் தங்களது உடன்பிறந்தவர்களோடு விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு புரியும்படி கூறுங்கள்: உங்கள் குழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என்று கூறுவதை தவிர்த்து விடுங்கள். மாறாக இதையெல்லாம் செய்யுங்கள் என்று கூறுங்கள். உதாரணமாக, டிவி பார்க்காதே என்று கூறாமல், ஒரு புத்தகத்தை கொடுத்து, இந்த கதையை படித்து அம்மாவிற்கு சொல்லு என்று கூறலாம் அல்லது ஒரு படத்தை கொடுத்து, இதுபோல் வரைந்து கொடு என்று கூறலாம்.

உங்களது குழந்தைகளைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே உங்களது குழந்தைகளின் திறனுக்கேற்ப அவர்களை வழி நடத்துவது நல்லது. அவர்களை ஒரு நாள் முழுக்க அமைதியாக இருக்க சொல்வது, அவர்களுக்கு தண்டனையாக 20 பக்கங்களுக்கு எழுத சொல்வது போன்றவற்றை நிறுத்திவிடுங்கள். ஏனெனில் இச்செயல்கள் பெற்றோர் மீது வெறுப்புணர்வை உண்டாக்கும்.

குழந்தைகளுடன் அன்பாக பழகுங்கள்: குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. சிறு குழந்தைகளுடன் விளையாடும்போது, குழந்தைகள் செய்வது போலவே, நீங்களும் செய்யலாம். அவர்களுடன் ஒன்றாக பாடலாம். டீன் ஏஜ் குழந்தைகள் அதிகமாக புகழ்ச்சியை எதிர்பார்ப்பார்கள். எனவே அவர்களுடன் கூடுதல் நேரம் செலவிட வேண்டும். அவர்களுக்கு பிடித்த கதாப்பாத்திரம் குறித்து அவர்களுடன் உரையாடலாம்.

அப்போது அவர்களுக்கு நன்னடத்தைகளை கற்றுக்கொடுக்கலாம். வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துரைக்கலாம். டீன் ஏஜ் குழந்தைகளிடம் நண்பர்கள் போல பழகலாம். இவ்வாறு பழகுவதன் மூலம் குழந்தைகள் அன்பாக நடந்து கொள்வார்கள் என்றும், பெற்றோர்களிடம் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் பகிர்வார்கள் என்று பேராசிரியர் க்ளூவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெற்றோர்கள் குழந்தைகளை கவனிப்பதில் தன்னிலை மறந்து, தங்களை கவனித்து கொள்ள மறந்து விடுவதாகக் கூறும் அவர், குழந்தைகள் தூங்கும்போது பெற்றோர் தங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கி, அவர்களுக்கு பிடித்த செயல்களில் ஈடுபடலாம் என்றும் பரிந்துரைக்கிறார்.

இதையும் படிங்க: வளரிளம் பெண்கள் கர்ப்பமடைவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? மருத்துவரின் முக்கிய அறிவுறுத்தல்கள்! - Teenage Pregnancy

Last Updated : May 31, 2024, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.