ஹைதராபாத்: சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் நமது துடிப்பான ஜனநாயகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னதாக தேசத்தின் பெரிய சாதனை என்றால் அது ஜனநாயக நடைமுறைகள் தொடர்வதைக் கூறுலாம். இந்திய வாக்காளர்கள் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க தீர்ப்பளித்துள்ளனர். இந்த தருணத்தில் கூட்டணி அரசு அமைவது தேசத்தின் வளர்ச்சியை தடை செய்யுமா? வல்லரசாகும் திட்டம் என்னவாகும் என அலசுகிறார் வேளாண் நிர்ணய ஆணைய குழுவின் முன்னாள் தலைவரான எஸ். மகேந்திர ராவ்.
பதவியேற்பு விழா கொண்டாட்டங்களெல்லாம் முடிந்து பிரதமரும் மற்ற அமைச்சர்களும் தங்கள் பணியை துவங்கியுள்ளனர். 2047 ம் ஆண்டில் வளர்ந்த நாடாக அங்கீகாரம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா இயங்கி வருகிறது. ஜிடிபி வளர்ச்சி என்பதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில் தேர்தல் முடிவுகள் வேலை வாய்ப்பு நாட்டில் சிக்கலான பிரச்சனையாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. அரசு வகுக்கப்போகும் கொள்கைகள் நிலையான, ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். புதிதாக அமைந்துள்ள கூட்டணி அரசுக்கு இந்த நோக்கங்களை அடைவதற்காக சவால்களும், வாய்ப்புகளும் இணைந்தே உள்ளன.
வளர்ச்சிக்கான இரண்டு காரணிகள் முதலீடு மற்றும் ஏற்றுமதி. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சி. ரங்கராஜன் 2047ம் ஆண்டில் வளர்ந்த நாடு என்ற லட்சியத்தை இந்தியா அடைவதற்கு தேவையான, வளர்ச்சி விகிதத்தை கணித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வளர்ச்சி அடைந்த நாடு என்ற நிலையை அடைய தனிநபர் வருமானம் 13,205 அமெரிக்க டாலர் என்ற நிலையை அடைய வேண்டும்.
2047ம் ஆண்டுக்கு இதனை தோராயமாக 15,000 அமெரிக்க டாலர் என எடுத்துக் கொள்ளலாம். இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் தேய்மானத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 7 சதவிகிதமாக இருக்க வேண்டும். இதனை அடைய மொத்த நிலையான மூலதன உருவாக்கம் ஜிடிபியில் 34 சதவிகிதமாக இருக்க வேண்டும் , தற்போதைய நிலையில் இது 28 சதவிகிதமாக உள்ளது.
பொதுத்துறை முதலீடுகள் மட்டுமின்றி, தனியார் முதலீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் தனியார் முதலிடுகளை ஈர்ப்பது அவ்வளவு எளிதல்ல, கார்ப்பரேட் வரிச்சலுகை மட்டுமின்றி திவால் சட்டத்திருத்தம், தயாரிப்பு சார்ந்த ஜிஎஸ்டி திட்டம் போன்ற சீர்திருத்தங்களும் தேவைப்படுகின்றன. இது அரசின் முதலீட்டு செலவீனத்தை அதிகரிக்கும்.
பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் தனியார் முதலீட்டை அதிகரிப்பதற்கான தேவை இருக்கிறது. வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்றுமதி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி என்பது , ஏற்றுமதி வளர்ச்சியுடன் நேரடித் தொடர்புடையது.
ஆனால் தற்போது உலக அளவில் ஏற்படும் மாற்றங்கள், இந்திய வர்த்தகத்தில் சில எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உலக அளவிலான உற்பத்தி சங்கிலியில் அசெம்பிளி அதாவது தயாரிக்கப்பட்ட பொருட்களை ஒருங்கிணைக்கும் மையமாக (major hub for final assembly) மாறுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
ஆனாலும் சமீப காலங்களில் இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் தற்காப்பு வடிவெடுத்து வருகின்றன. இறக்குமதிக்கான வரிவிதிப்பு சமீப வருடங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், சீனாவின் தற்போதைய நிலையால் உருவாகும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் வரிவிதிப்பு குறைக்கப்பட வேண்டும்.
ஆத்மநிர்பார் (தற்சார்பு இந்தியா) என்ற பெயரில் தற்காப்பு அம்சங்களை அதிகமாக்கத் தேவையில்லை. இந்தியா போன்ற எழுச்சிபெறும் சந்தை ஒன்று 7 முதல் 8 விழுக்காடு வளர்ச்சியை வரும் தசாப்தங்களில் பெற வேண்டுமானால், வலிமையான ஏற்றுமதி வளர்ச்சியின்றி சாத்தியமில்லை. இந்தியா தற்போது 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது, மிகவிரைவில் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்.
ஆனாலும், தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரையிலும் 180 நாடுகளில் 138வது தரநிலையிலேயே உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். 1990ம் ஆண்டு தனிநபர் வருமானத்தில் இந்தியாவும் , சீனாவும் ஒரே தரநிலையில் தான் இருந்தன. ஆனால் தற்போது சீனாவின் தரநிலை 71 (with $12000) ஆனால் இந்தியாவின் தரநிலை 138 ( with $2600). இதனால் தனிநபர் வருமானத்தில் மற்ற நாடுகளுடன் போட்டி போட வேண்டுமானால், இந்தியா இன்னும் வேகமாக செயலாற்ற வேண்டும்.
இந்திய பொருளாதாரத்தில் அடிப்படைத் தேவையாக இருக்கும் மாற்றம் என்னவென்றால், வேளாண்மை முதல் உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு விஷயத்தில் அடிப்படையான அமைப்பு மாற்றம் தேவைப்படுகிறது. வேளாண்துறைக்கு உட்கட்டமைப்பும், முதலீடும் தேவைப்படுகிறது.
இந்திய வேளாண்துறையின் வியூக அமைப்பு என்பது பரந்துபட்ட மதிப்பு மிக்க பொருட்களின் உற்பத்தியை நோக்கியதாக இருக்க வேண்டும், இது விலை மற்றும் நியாயமான வருவாயை உறுதி செய்ய வேண்டும். இதே போன்று உற்பத்தித் துறையானது, ஜிடிபி வளர்ச்சியை உறுதி செய்வதோடு, வேலை வாய்ப்பு வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தரமான , அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக புதிய அரசுக்கு இருக்கும. 2012 முதல் 2019 வரையிலும் பொருளாதார வளர்ச்சி வேகமானது 6.7 சதவிகிதமாக இருந்தது. ஆனால் வேலை வாய்ப்பு வளர்ச்சி விகிதம் 0.1 சதவிதிகம் மட்டுமே என்பதை நினைவில் கெள்ள வேண்டும்.
முறை சாரா துறைகளில் தரமற்ற வேலைகளே நிறைந்திருந்தன. முறைசார்ந்த துறைகளிலும் முறைசாரா வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை உயர்ந்தது தான் விநோதம். இந்த வேலைகளில் பெண்களின் பங்களிப்பு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களும் அடுத்த பிரச்சனையாக உருவெடுத்தது.
உலகளவில் மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தை வைத்துள்ளது இந்தியா (15 முதல் 29 வயதுக்குட்பட்டோர் 27 சதவிகிதம்) . மாநிலங்களைப் பொறுத்து இந்த விகிதம் மாறுபடலாம். கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் மட்டுமே இந்த விகிதம் பொருந்தும். பொதுவான வேலை வாய்ப்பின்மையில் இந்த இளைஞர் பட்டாளத்தின் வேலை வாய்ப்பின்மை பிரச்சனை மும்மடங்காக உள்ளது.
வேலையில்லாதவர்களில் 83 சதவிகிதம் இளைஞர்கள். பள்ளிப்படிப்பு படித்தவர்களில் வேலைவாய்ப்பின்மை 18.4 சதவிகிதமாக உள்ளது. பட்டதாரிகளில் 29.1 சதவிதிகிதமாக உள்ளது. பட்டதாரி பெண்களில் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 34.5 ஆக உள்ளது. இந்த வேலைவாய்ப்பின்மை பிரச்சனையால் தான், இடஒதுக்கீடு கேட்டு பல்வேறு சாதிப் பிரிவினர் அதிகமாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
நிதி ஆயோக்கின் ஒரு ஆவணம் குறிப்பிடுவது என்னவென்றால், இந்தியாவில் வெறும் 2.3 சதவிகித ஊழியர்களே முறையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி (Skill Training) பெற்றுள்ளனர். இதற்கு மாறாக இங்கிலாந்தில் 68 சதவிகிதம் பேரும், ஜெர்மனியில் 75 சதவிகிதம் பேரும், ஜப்பானில் 80 சதவிகிதம் பேரும், தென் கொரியாவில் 96 சதவிகிம் பேரும் திறன்மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர்.
55 சதவிகித இளைஞர்களுக்கு வேலையின் தரமே பிரச்சனையாக உள்ளது. மாறாக உயர்கல்வி பெற்று பணியில் இருக்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் பணிக்கு தேவையானதை விட அதிக தகுதியைப் பெற்றுள்ளனர். தொழில்நுட்பமும் மற்றொரு பிரச்சனையாக உள்ளது. வளர்ந்த நாடுகளில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானாகவே பணிகளை செய்யக்கூடிய ரோபோக்களால் வேலையாட்களுக்கான டிமாண்ட் குறைந்து வருகிறது.
இதற்கும் இந்தியா தயாராக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த வளர்ச்சியில் அடுத்த சவாலாக இருப்பது கல்வி மற்றும் மருத்துவ சேவை. இந்த சேவைகளில் இருக்கும் முரண்பாடுகள் களையப்பட வேண்டும். ஐஐடி , ஐஐஎம் போன்ற உயர்தரத்தில் கல்வி வழங்கும் நிறுவனங்கள் இருந்தாலும இவை தீவுகளைப் போன்றே செயல்படுகின்றன. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், குறைந்த திறனுடையவர்களாகவே மாணவர்களை தயார் செய்கின்றன.
முன்னாள் கல்வித்துறை செயலாளர் ஒருவரின் கூற்றுப்படி, “ இந்தியாவில் பள்ளிக்கல்வியைப் பொறுத்த வரையிலும், அனைவரையும் பள்ளிக்கு வர வைப்பதைத் தவிர்த்து மற்ற அனைத்தும் தவறாகவே நடக்கிறது “ என்கிறார். இந்த பிரச்சனை திறன் மேம்பாட்டிலும் உள்ளதால், இந்திய நிலப்பரப்பை பயனுள்ளதாக மாற்றுவது சவாலானதாகவே உள்ளது.
எனவே ஒரே மாதிரியான மருத்துவ சேவையை அனைவருக்கும் வழங்க, ஜிடிபி யில் 2.5 முதல் 3 சதவிகிதம் வரையிலும் கல்வியில் செலவிட வேண்டும். கல்வியிலும், மருத்துவத்திலும் சமவாய்ப்பு வழங்குவத, மனிதவள மேம்பாட்டுக்கு உதவுவதோடு, சமூகத்தில் நிலவும் சமமற்ற தன்மையையும் சீர்படுத்த உதவும்.
பிராந்தியங்களில், சாதிகளில், நகர்ப்புற - கிராமப்புற வேறுபாடுகளால், பாலினத்தால் நிலவும் சமமற்ற தன்மையை எதிர்கொள்வது இந்த அரசு எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகும். ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு சமூகநலத்திட்டங்கள் முக்கியமானவை. ஆனால் அதே நேரத்தில் , வருவாயை பெருக்குவதோடு, வளர்ச்சிப் பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். சமூகநலப்பணிகள் மட்டுமே வறுமை மற்றும் சமமற்ற தன்மையை நீக்கி விடாது.
இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்புகளே, இலவசமாக கொடுக்கும் பொருட்களல்ல என்தை சமீபத்திய தேர்தல் காண்பித்துவிட்டது. சமூகநலத் திட்டங்கள் குறித்து சீனப்பழமொழி ஒன்றை பொருத்திப் பார்க்கலாம், ஒரு மனிதனுக்கு மீனைக் கொடுத்தால் அன்று மட்டுமே உணவளிக்க முடியும்.
அடுத்த நாள் அவன் மீண்டும் பசியோடிருப்பான். எனவே நீ மற்றொரு மீனை கொடுக்க வேண்டும். மாறாக எப்படி மீன்பிடிப்பது என கற்றுக் கொடுத்தால், நாள் தோறும் தனக்கு தேவையான உணவை அவனே தேடிக் கொள்ள முடியும். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சுப்பாராவ் சொல்கிறார், “ நமது பட்ஜெட்டுகள் பற்றாக்குறையுடன் இருப்பதற்கு காரணம், இலவசப் பொருட்கள் கடன் வாங்கி கொடுப்பதால் தான் என்கிறார்.
இந்த கடன்கள் வளர்ச்சிக்கு உதவாவிட்டால், வருவாய் பிரச்சனையும் சுமையும் நமது குழநதைகள் தலையில் தான் விழும். இதற் பதிலாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசின் பணி முக்கியமானது, இதுவே அதிக வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கும் வழி வகுக்கும். டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா நகரங்களை இணைக்கும் வகையில் தங்க நாற்கர சாலைத் திட்டம் முன்னாள் பிரதமர் அடல் பிஹரி வாஜ்பாய் காலத்தில் அமைக்கப்பட்டது.
இந்த திட்டம் உற்பத்தித் துறையில் நேர்மறையாக ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதில் சராசரியான வளர்ச்சி கொண்ட மாவட்டங்களில்,சுமார் 49 சதவிகிதம் அளவுக்கு உற்பத்தி அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மிதமான மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டங்களான, குஜராத்தின் சூரத், ஆந்திராவின் ஸ்ரீகாக்குளம் போன்ற மாவட்டங்கள் 100 சதவிகித உற்பத்தி வளர்ச்சியைக் கண்டுள்ளன. இது மட்டுமின்றி நாற்கர சாலைகளால், புதிய நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிரித்துள்ளது.
இதே போன்று நீடித்து நிலைக்கும் தன்மை , காலநிலை மாறுபாட்டையும் கருத்தில் கொள்வது அவசியமானது. மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் அரசுகள், பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளை களைய தயாராக இருக்க வேண்டும். இந்தியாவில் நகரங்களை நோக்கி மக்கள் குடிபெயர்வது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒருங்கிணைந்த, நீண்ட நாட்கள் தாக்குபிடிக்கக் கூடிய வகையில் நகரமயமாக்கலை திட்டமிடவது அவசியமாகிறது.
சமீபத்தில் உலக நகரங்களுக்கான குறியீட்டை, ஆக்ஸ்போர்டு அனாலிட்டிக்ஸ் வெளியிட்டது. இதில் இந்திய நகரங்களின் பொதுவான பிரச்சனையான வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல் பிரச்சனை, குறைந்த தனிமனித முதலீடு போன்றவை இந்திய நகரங்களின் தர நிலையை குறைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தைப் பொறுத்தவரையிலும அமராவதியை தலைநகராக கட்டமைக்கப் போகும் புதிய அரசு, பொருளாதார வளர்ச்சி, மனித மூலதனம், வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு, நகரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் நிர்வாகம் இருக்க வேண்டும். திட்டமிடப்பட்ட பசுமை நகரங்கள் காலத்தின் தேவையாக உள்ளன.
பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தியா மத்தியில் அதிகாரக்குவிப்புடைய அரசாக உள்ளது. வேற்றுமை உணர்வு உருவாகிவிடக் கூடாது என்ற பயம் அரசியலமைப்பை எழுதியவர்களின் மனதில் இருந்ததன் விளைவு தான் இது. தற்போது அமைந்துள்ள புதிய கூட்டாட்சி அரசு, கூட்டாட்சி தத்துவத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டுமானால், மாநிலங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். உள்ளாட்சி அமைப்புகள் பலம் பெறுவதும் அவசியம். ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையின் படி, பஞ்சாயத்து அமைப்புகள் தங்கள் வருவாயில் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே வரி மூலமாக பெறுகின்றன. மற்ற அனைத்து தொகையும் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பாகவே கிடைக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதன் மூலம், சிறந்த அரசு நிர்வாகம் மற்றும் வேளாண்மை, ஊரக வளர்ச்சியில் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.
விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் உள்ளாட்சி அமைப்புகள், சிறந்த நிர்வாகம் மற்றும் சிறந்த பலன்களைத் தரவல்லவை என ஒரு ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உள்ளூர் நிர்வாகங்கள் தங்கள் விருப்பத்திற்கேட்ப செலவிடும் தொகையை உலக அளவில் ஒப்பிட்டால், இது சீனாவில் 51 சதவீதம், அமெரிக்காவில் 27 சதவீதமாக உள்ளது.
இதுவே பிரேசில், மற்றும் இந்தியாவில் வெறும் 3 சதவிகிதமாக உள்ளது. நிறைவாக 2047 ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு என்ற என்ற இலக்கை நோக்கி நகரும் இந்தியாவில், புதிதாக அமைய உள்ள அரசுக்கு பல வாய்ப்புகள் மற்றும் சவால்கள் காத்திருக்கின்றன. சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் எதிரொலித்தன.
வளர்ச்சிக்கான இலக்குகள், வேலை வாய்ப்பு உருவாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்த தன்மையை அடைய மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வளர்ச்சி இலக்குகளை அடைவதில் தனி கட்சியின் அரசைக் காட்டிலும் , கூட்டணி ஆட்சி வலிமை குறைந்தது என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை எனலாம்.
இதையும் படிங்க: மக்களவை தேர்தல் வெற்றியை தோல்வி போல் உணரும் பாஜக! 400 எதிர்பார்ப்பில் 32 பற்றாக்குறையானது எப்படி? - Lok Sabha Election results 2024