ETV Bharat / state

''நீங்கள் எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாடு உங்களை விரட்டியடிக்கும்'' - வைகோ ஆவேசம்! - Lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 5:08 PM IST

வைகோ பேச்சு
நீங்கள் எத்தனை முறை வந்தாலும் தமிழகம் உங்களை விரட்டியடிக்கும்

Vaiko criticized Modi: இந்தியாவில் ஜனாதிபதி முறையை அமல்படுத்தி, மற்றவர்கள் அவருக்கு அடங்கி நடக்க வேண்டும் எனும் திட்டத்தை மோடி வகுத்துள்ளார் என புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார்.

புதுக்கோட்டை: திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து, புதுக்கோட்டை, சின்னப்பா பூங்கா அருகே தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அதிமுக செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு, தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய வைகோ, “நமது எதிர்காலம் ஜனநாயகமாக இருக்கப் போகிறதா, பாசிச வெறி பிடித்த சர்வாதிகாரமாக இருக்கப் போகிறதா என்பதை தீர்மானிக்கின்ற காலம் தான் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு ஏழு முறை வந்து என்ன பேசுகிறார்? திராவிட இயக்கத்தை ஒழிக்காமல் விடமாட்டேன். திராவிட இயக்கத்தை கூண்டோடு அழிப்பேன். இதைச் செய்யாமல் போகமாட்டேன் என்று பேசியுள்ளார். மிஸ்டர் நரேந்திர மோடி, திராவிடத்தின் வரலாறு உங்களுக்கு தெரியாது.

பெரியார், அண்ணா போன்றோர்கள் கட்டிக்காத்த இந்த திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டு வருவதற்கு பாஜக துடிக்கிறது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை காப்பதற்கு, சர்வாதிகாரம் தலைதூக்கும் என்ற எண்ணத்தில், நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை மாற்றி விட்டு, ஜனாதிபதி முறையில் ஜனாதிபதி தான் தலைவர், மற்றவர்கள் அனைவரும் அவருக்கு அடங்கி நடக்க வேண்டும், அமெரிக்காவைப் போல, ரஷ்யாவைப் போல அந்த வழியில் கொண்டு போகும் திட்டத்தை மோடி வகுத்துள்ளார். அதற்காகத்தான் தமிழ்நாட்டைச் சுற்றி சுற்றி வருகிறார்.

இந்தியாவிலேயே வலுவாக அதை எதிர்க்கக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு அதை எதிர்க்கும், அதை எப்படி சமாளிப்பது என்று அவர் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார். நீங்கள் எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாடு உங்களை விரட்டியடிக்கும்.

நீங்கள் எங்களை கூண்டோடு அழிப்போம் என்று சொன்னீர்களே அதற்கு என்ன காரணம், பிரதமர் என்ற மண்டை கொழுப்பு, என்ன மன தைரியம் இருந்தால் திராவிடத்தை அழித்து விடுவோம் என்று சொன்னீர்கள். நாங்கள் ரத்தமும், கண்ணீரும் சிந்தி லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டி எழுப்பிய இந்த இயக்கத்தை, எவராலும் சீண்டிப் பார்க்க முடியாது.

அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனது மகன் துரை வைகோவிற்கு இல்லை, கடந்த மூன்று வருடமாக எனக்கு உடல்நிலை சரியில்லை, கரோனா வருவதற்கு முன்பே எனக்கு உடல்நிலை சரியில்லை. இந்த சூழ்நிலையில் எனக்கு தெரியாமலேயே கட்சிப் பணியை ஆற்றி வந்தார்.

இதையடுத்து அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர், இதனையடுத்து, அண்ணா வழியில் கட்சி நிர்வாகிகளுடைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 106 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நிலையில், 102 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தன் அடிப்படையில், அவர் இந்த பொறுப்பிற்கு வந்துள்ளார். அதன்படியே தற்போது திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நான் எத்தனை வருடம் உயிரோடு இருக்க போகிறேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் லட்சிய தாகத்தோடு உருவாக்கப்பட்ட இந்த கட்சியில் எனக்கு அடுத்தபடியாக துரை வைகோ இருப்பார். இந்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பக்க பலமாக இருக்கக்கூடிய இயக்கம். இந்தியா கூட்டணி 40க்கும் 40 ஜெயிக்கப் போகிறது. அதில் திருச்சிராப்பள்ளியில் போட்டியிடக் கூடிய துரை வைகோவும் ஒருவராக இருப்பார்” என்றார்.

இதையும் படிங்க: "அம்மா ஜெயலலிதா; மணல் விற்பனையில் ரூ.4 ஆயிரம் கோடி" - வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.