ETV Bharat / state

"இங்கு திமுக Vs அதிமுக தான்" - கனிமொழி திட்டவட்டம்! - Kanimozhi Election Campaign

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 10:54 PM IST

Kanimozhi Election Campaign
Kanimozhi Election Campaign

Kanimozhi Election Campaign: “வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, போட்டி என்று பார்க்கும் போது நிச்சயமாக திமுகவிற்கும், அதிமுகவிற்கும்தான், பாஜகவை, மக்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள்” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: திமுக சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக, தூத்துக்குடியின் தற்போதைய சிட்டிங் எம்.பியாக செயல்படும் கனிமொழியே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் வாயிலில் அமைந்திருக்கும் முன்னால் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, இன்று (மார்ச் 24) பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

அப்போது திறந்த வெளி வாகனத்தில் நின்று திமுக வேட்பாளர் கனிமொழி பேசுகையில், "தூத்துக்குடி என்பது எனக்கு இரண்டாவது தாய் வீடு. மறுபடியும் இங்கு வெற்றி பெற்று உங்களோடு பணியாற்றக்கூடிய வாய்ப்பை நீங்கள் எனக்கு அளிக்க வேண்டும். அதே நேரத்தில், இந்த 'நாடும் நமதே, 40ம் நமதே' என்ற நிலையை உருவாக்கிக் காட்ட வேண்டும்.

ஏனென்றால், தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து, தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நியாயமான திட்டங்களை நமக்குத் தராமல், வெள்ள நிவாரணத்தைக் கூட நமக்கு நிதி வழங்காமல், நம்மை வஞ்சித்திருக்கக்கூடிய மத்திய பாஜக அரசை, இந்த நாட்டில் இருந்து அகற்ற வேண்டும். மத்திய ஆட்சியில் இருந்து அவர்கள் அகற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, இந்த தேர்தலிலே நாம் பணியாற்ற வேண்டும்.

பிரதமர் வெள்ளத்தின் போது மக்களைப் பார்க்க வரவில்லை. ஆனால், தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகின்றார். திமுகவை இல்லாமல் ஆக்கி விடுவோம் என்று அறைக்கூவல் விட்டுக் கொண்டிருக்கின்றார். இத்தனை ஆண்டுகளாக, திராவிட முன்னேற்றக் கழகத்தை இல்லாமல் செய்து விடுவோம் என்று சொல்லி இருக்கின்ற பல பேரை நாம் சந்தித்திருக்கின்றோம். தற்போது, அவர்கள் எங்கே என்று தேடக்கூடிய நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட மாடல் ஆட்சியை இந்த நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்கக்கூடிய ஆட்சியாக முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் திட்டத்தையும், காலை உணவுத் திட்டத்தையும் நாடு முழுவதும் அமல்படுத்த இருக்கின்றோம்.

ஒன்றிய மோடி ஆட்சியில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை மானியம் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். மத்தியில் நம்முடைய கூட்டணி ஆட்சி வந்தவுடன், நிச்சயமாக பெட்ரோல் 75 ரூபாய், டீசல் 65 ரூபாய், கேஸ் சிலிண்டர் 500 ரூபாய் என்று மாற்றி அமைக்கப்படும்" என்று பேசினார்.

இதற்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனிமொழி, "தூத்துக்குடி பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக வெற்றி பெறும். என்னுடைய தொகுதி மட்டுமின்றி, மற்ற தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்கான அட்டவணைகள் தயாராகிக் கொண்டிருக்கிறது (தற்போது அட்டவணை வெளியாகிவிட்டது). கண்டிப்பாக மற்ற தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வேன்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, போட்டி என்று பார்க்கும் போது நிச்சயமாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதிமுகவிற்கும்தான். பாஜகவை, மக்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள். சென்னை, கோயம்புத்தூரில் பாஜக வெற்றி பெறும் என அண்ணாமலை கூறுகிறார். சவால் விடுவது இருக்கட்டும், வாக்கு எண்ணிக்கையின் பொழுது தான் அது தெரியும்.

மேலும், பாஜக ஆண்டு கொண்டிருக்கும் மாநிலங்களில், எந்த மாதிரியான நிலைமை உள்ளது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். முன்னேறிய மாநிலங்களில் முக்கியமான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் என அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களை உள்வாங்கியதால்தான். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வருமானால், தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. முதலில் நாட்டை காப்பாற்ற வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: நாளை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத் தாக்கல்! - Nomination Files

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.