தமிழ்நாடு

tamil nadu

அரசியலமைப்புச் சட்டம் பெரிதா? ஆளுநர் பெரிதா? - திருமாவளவன் திட்டவட்டம்

By

Published : May 25, 2022, 3:37 PM IST

அரசியலமைப்புச் சட்டம் பெரிதா அல்லது ஆளுநர் பெரிதா என்ற நிலையில் தான் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்து, அரசியலமைப்புச் சட்டம் தான் முதன்மையானது என நிரூபித்துள்ளது என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் பெரிதா? ஆளுநர் பெரிதா? - திருமாவளவன் திட்டவட்டம்
அரசியலமைப்புச் சட்டம் பெரிதா? ஆளுநர் பெரிதா? - திருமாவளவன் திட்டவட்டம்

தூத்துக்குடி:தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில், நேற்று (மே 24) ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில், உயிர்ச்சூழல் காக்கப் போராடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு நான்காம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் மற்றும் உயிர்ச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், பச்சை தமிழகம் தலைவர் சுப.உதயகுமாரன், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு மேத்தா பட்கர் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் திருவுருவப் படத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “சுற்றுச்சூழல் பாதிப்பிற்காக போராடியவர்கள் மீது அப்போதைய அதிமுக அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது ஒரு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செயல். எந்த ரூபத்திலும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படக் கூடாது. தமிழ்நாட்டில் திமுக அரசு கொண்டுவந்த 15 சட்ட மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் பெரிதா? ஆளுநர் பெரிதா? - திருமாவளவன் திட்டவட்டம்

இதற்கான போராட்டங்களைத்தான் நாம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் பெரிதா அல்லது ஆளுநர் பெரிதா என்ற நிலையில் தான் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்தது. இதன்மூலம் அரசியலமைப்புச்சட்டம் தான் முதன்மையானது என நிரூபித்துள்ளது. மேலும், அந்த வகையில் சமூக நீதி காத்து வரும் திமுக அரசு மக்களுடைய குரலாக இருக்கும்’’ என்றார்.

கனிமொழி

இதைத்தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி, “ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ளது தவறாகவும் இருக்கலாம். ஆனால், என்றும் மக்களின் போராட்டம் வெல்லும். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவும் உடன் இருப்பார்கள்.

அந்தவகையில் தான் திமுக ஆட்சி ஏற்பட்டவுடன், ஒரு நபர் ஆணைய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவரின் இடைக்கால அறிக்கையைப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செய்து கொடுத்தார். இதுமட்டுமன்றி, தற்போது அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணையக் குழு அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அளித்துள்ளார்.

இந்த அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசு விரைவில் மக்களிடம் பகிர்ந்து கொள்ளும். மேலும், திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details