ETV Bharat / state

சென்னை தனியார் பொருட்காட்சிக்கு சீல்.. செய்தித்துறை இணை இயக்குநர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு! - Private Exhibition Sealed Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 12:05 PM IST

Private Exhibition Sealed In Chennai: சென்னையில் அனுமதி இன்றி செயல்பட்டதாக கூறி தனியார் பொருட்காட்சிக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பொருட்காட்சி இணை இயக்குநருக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் சீல் வைக்கிறார்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

A sealed private exhibition
சீல் வைத்துப் பூட்டப்பட்ட தனியார் பொருட்காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

செந்தில்குமார் குற்றச்சாட்டு வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை பல்லாவரத்திலிருந்து பம்மல் செல்லும் பிரதான சாலையில் உள்ள ஆட்டுத்தொட்டி பகுதியில் கடந்த 1ஆம் தேதி முதல் தனியார் நிறுவனம் ஒன்றால் ராட்டினம் மற்றும் அதனுடன் கூடிய பொருட்காட்சிப் பூங்கா செயல்பட்டு வந்தது.

இதற்குக் கட்டணம் வசூலித்துக் கொண்டு பொதுமக்களை அந்த தனியார் நிறுவனம் அனுமதித்து வந்தனர். மேலும், பள்ளி கோடை விடுமுறை என்பதால் பொதுமக்களும் அதிக அளவில் அந்த பொருட்காட்சிப் பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து சென்றனர்.

இந்த நிலையில், அந்த பொருட்காட்சிப் பூங்காவில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும், உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாகவும் பல்லாவரம் வட்டாட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த புகார்களை மையமாகக்கொண்டு, பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொருட்காட்சித் திடலை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அவர்களிடம் தீயணைப்புத் துறை சார்பில் வழங்கப்பட்ட கடிதம் மட்டுமே இருந்ததாக கண்டறிந்துள்ளனர்.

மேலும், வருவாய்த்துறை சார்பில் உரிய அனுமதி எதுவும் பெறாமலும், பொதுமக்களுக்கான உயிர் காக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் பொருட்காட்சித் திடல் மற்றும் ராட்டினத்தை இயக்கி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த பொருட்காட்சி திடலில் உள்ள ஊழியர்களை வெளியேற்றி விட்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்டை பூட்டி சீல் வைத்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து பொருட்காட்சி உரிமையாளரான செந்தில்குமார் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த மைதானம் பல்லாவரம் கண்டோனுக்குச் சொந்தமானது அவர்களிடம் முறையாக நாங்கள் 45 நாள் பொருட்காட்சி நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். அதுமட்டுமின்றி காவல்துறை தீயணைப்புத் துறை ஆகியோரிடமும் அனுமதி பெற்றுள்ளோம்.

இந்த மைதானத்தில் பொருட்காட்சி நடத்துவதற்கு தாசில்தாரிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த மூன்று வருடங்களாக இப்படித்தான் நடத்தி வருகிறோம். ஆனால், முதலமைச்சரின் நிவாரண நிதி என எங்களுக்கு பணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் பொருட்காட்சி இணை இயக்குநராக பணிபுரியும் தமிழ் செல்வராஜ் என்பவருக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் சீல் வைக்கிறார்கள்" என குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: டீக்கடைக்குள் புகுந்து இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் தலைவர் கொடூர கொலை.. பூந்தமல்லி அருகே பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.