ETV Bharat / state

ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு! - Nainar nagendran

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 11:23 AM IST

Nainar nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி எஸ் ஆர் சேகரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த 21ஆம் தேதி பாஜக மாநில பொருளாளரான எஸ் ஆர் சேகரின் கோவை இல்லத்திற்கு நேரடியாக சென்ற சிபிசிஐடி போலீஸ்சார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் விசாரணையின் போது எஸ் ஆர் சேகர் அளித்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக திருப்திகரமாக இல்லாததால் சிபிசிஐடி போலீசார் மீண்டும் எஸ் ஆர் சேகருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் எஸ் ஆர் சேகருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இருப்பதால் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு அவரையும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரிடம் விசாரணை நடத்திய பின்பு இந்த வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நெல்லை பாஜக வேட்பாளரான நையினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னையில் கொலை மிரட்டல்! - Narendra Modi Life Threat

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.