விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம அறைகளுக்கு சீல்!

By

Published : Mar 14, 2023, 9:56 PM IST

thumbnail

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கபட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மற்றும் அவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே அன்புஜோதி ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி, அவரது மனைவி மரியா, பணியாளர்கள் சதீஷ் மற்றும் கோபிநாத் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கபட்டுள்ளனர். 

இந்த நிலையில் அன்புஜோதி ஆசிரமத்தில் 3 வயது குழந்தை இருந்தது தொடர்பாக குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த், ஆட்சியர் பழனி, விக்கிரவாண்டி தாசில்தார் ஆதி சக்தி சிவகுமரிமன்னன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் காப்பகத்தைச் சார்ந்த 6 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் சிகிச்சை பெற்று வருவதால்,  அவர்களை நேரில் சந்தித்து ஆனந்த் விசாரணை செய்தார். 

பின்னர் மீண்டும் குண்டலப்புலியூர் ஆசிரமத்திற்கு வந்த குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் ஆட்சியர் சி.பழனி ஆகியோர் முன்னிலையில், விக்கிரவாண்டி தாசில்தார் ஆதி சக்தி சிவகுமரிமன்னன் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்த நிர்வாகி ஜீபின் பேபி தங்கியிருந்த அறை மற்றும் வார்டன் அறை ஆகிய இரண்டு அறைகளுக்கும் சீல் வைத்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த், “ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டதில் பாண்டிச்சேரி திரிபுரா, மேகாலயா மற்றும் மேற்கு வங்கம் போன்ற 5 மாநிலங்களைச் சார்ந்தவர்கள் சம்பந்தபட்டிருப்பதால், இரண்டு நாட்களில் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. 

2021ஆம் ஆண்டில் 60 பேரை தங்க வைப்பதற்காக மட்டுமே கட்டட அனுமதி பெற்றிருந்தது. ஆனால், அதன் பிறகு 150க்கும் மேற்பட்டோர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். செயற்கையான வழியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிரக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் ஓரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் கை, கால்கள் உடைக்கபட்டு, அவர்களுக்கு டிரக்ஸ் வழங்கி மதமாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் ஆசிரமத்தில் இருந்தவர்கள் மீது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.