போடு ஆட்டம் போடு... நடுரோட்டில் அரசுப்பேருந்து மேல் ஏறி குத்தாட்டம் போட்ட இளைஞர் வீடியோ வைரல்!

By

Published : Jul 19, 2023, 5:53 PM IST

thumbnail

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் அரசு பஸ் மீது ஏறி ஆட்டம்போட்ட இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ளது, களக்காடு கிராமம். இங்கு கடந்த ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாள் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொது நல அமைப்பினர் உள்ளிட்டப் பலர் பங்கேற்று  களக்காட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதுபோல களக்காட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரண்டு வந்த பொதுமக்களும் அணி, அணியாக வந்து, காமராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இவ்விழாவின் போது இளைஞர்கள் மேள தாளங்களுடன் ஆட்டம் போட்டவாறு களக்காடு அண்ணா சிலை பஸ் நிறுத்தத்தில் ஊர்வலமாகச் சென்றனர். 

அப்போது நாகர்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி வந்த அரசு பஸ் ஊர்வலத்தினிடையே சிக்கியது. திடீர் என கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் பஸ்ஸின் மேற்கூரை மீது ஏறி ஆட்டம் போட ஆரம்பித்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைப் பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரும் அவரைத் தடுக்கவில்லை.

அங்கிருந்தவர்கள் இளைஞரை பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் தொடர்ந்து ஆடி வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து களைப்படைந்த இளைஞர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். 

ஆனால், அந்த இளைஞர் போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து தற்போது அரசு பஸ் மீது அத்துமீறி ஏறி ஆட்டம் போட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதையடுத்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் பஸ்சின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர் களக்காடு அருகே உள்ள மாவடி, ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த தர்மலிங்கத்தின்  மகன் சிவலிங்கம் (25) என்பது தெரியவந்தது. அவர் தலைமறைவாகிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.