ETV Bharat / state

விடிய விடிய கொண்டாடப்பட்ட கரூர் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்! - flower sprinkling ceremony at karur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 10:53 PM IST

Flower sprinkling ceremony: கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா, நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை இசை வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புகைப்படம்
மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

கரூர்: ஆயிரக்கணக்கான பக்தர்களுடன், கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா நேற்று (மே 17) இரவு ஆட்டம் பாட்டத்துடன் விமர்சையாக நடைபெற்றது. கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வைகாசி திருவிழா கடந்த மே 12ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக பூச்சொரிதல் விழா, நேற்று (மே 17) இரவு துவங்கி இன்று (மே 18) அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. இதனையொட்டி, கோயில் மண்டபத்தில் மகாசண்டிஹோமம் நடைபெற்றது.

பின்னர், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பூச்சொரிதல் விழாவையொட்டி, கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு பூத்தட்டு கொண்டு வந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கரூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து 49 பூத்தட்டுகள் மாரியம்மன் கோயில் வரை கொண்டு வரப்பட்டது.

அவர்கள் தங்களது பகுதியில் இருந்து அம்மனை அலங்கரித்து, ரதத்தில் வைத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். ரதத்தினை பின்தொடர்ந்த படியே, பக்தர்கள் அம்மனை வேண்டியபடி பூத்தட்டுகளுடன் நடந்து வந்தனர். அப்போது ரதத்திற்கு முன்பாக வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு, இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அம்மன் ரதங்களுடன் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த பூத்தட்டு ஊர்லமானது, வரிசையாக கரூர் மாரியம்மன் கோயிலை அடைந்ததும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது, பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பூக்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த பூச்சொரிதல் விழாவையொட்டி, பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்றது. இந்நிலையில், மே 29ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அன்று கரூர் மாவட்டத்திற்கு அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், விடுமுறை நாளை ஈடு செய்ய ஜூன் 8ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு வேலை நாளாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 3 டன் எடையுள்ள தேரினை தோளில் தூக்கிய பக்தர்கள்.. தஞ்சை முத்து மாரியம்மன் கோயில் தூக்குத்தேர் திருவிழா கோலாகலம்! - Thooku Ther Thiruvizha

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.