ரூ.2,000 லஞ்சம் வாங்கிய பல்லாவரம் சார் பதிவாளர் கைது!

By

Published : Mar 30, 2023, 10:41 AM IST

thumbnail

சென்னை: கோவிலம்பாக்கம் கொளத்தூர் மாரியம்மன் கோயில் ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது, பூர்வீக சொத்தான 1098 சதுர அடி நிலம் கோவிலம்பாக்கத்தில் உள்ளது. இவரது, தந்தை கடந்த 2013-ஆம் ஆண்டு இறந்துள்ளார். அப்போது, சரவணன் 13 வயதுடையவராக இருந்த காரணத்தினால், சொத்து பட்டாவில் சரவணன் பெயரும் அவருடைய தாயாரின் பெயரும் இருந்தது.

தற்போது, சரவணனின் சகோதரியின் திருமணத்திற்காகச் சொத்தினை வங்கியில் அடமானம் வைக்கச் சென்றபோது வங்கியில் செட்டில்மெண்ட் பத்திரத்தில் பெயரை மாற்றி வரும்படி கூறியுள்ளனர். எனவே, இது தொடர்பாக, சரவணன் 28.03.2023-ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று பெயர் மாற்றம் செய்ய, சார் பதிவாளர் செந்தில்குமாரைச் சந்தித்துள்ளார். 

அப்போது, சார் பதிவாளர் செந்தில்குமார் பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்து தர தனக்கு ரூ.5,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார். ஆனால், சரவணன் லஞ்சம் தர மறுத்துள்ளார். இதனால், செந்தில்குமார் லஞ்சப் பணத்தை ரூ.2,000 ஆகக் குறைத்துள்ளார். இருப்பினும், சரவணனுக்கு லஞ்சம் தர விருப்பமில்லாத காரணத்தால், அவர் இது குறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். 

இதனால், சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சார்பதிவாளரை கையும் களவுமாகப் பிடிக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர். எனவே, சரவணனிடமிருந்து லஞ்சப் பணம் ரூ.2 ஆயிரத்தைச் சார் பதிவாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில், இடைத்தரகராகச் செயல்பட்ட சிவக்குமார் பெற்றபோது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

இதையும் படிங்க: ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. நெல்லையில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.