ETV Bharat / state

ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. நெல்லையில் நடப்பது என்ன?

author img

By

Published : Mar 30, 2023, 8:06 AM IST

Etv Bharat
Etv Bharat

அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிபாளர் பல்வீர் சிங்(Balveer Singh) விசாரணை கைதிகளின் பற்களை கட்டிங் பிளேயர் வைத்து பிடுங்கியதாக எழுந்த புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தான் கீழே விழுந்ததில் தான் பல் உடைந்ததாக கூறியுள்ளது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த பல்வீர் சிங் ஐபிஎஸ், குடும்பப் பிரச்சனை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வாயில் ஜல்லிக் கற்களைப் போட்டுக் கொடுமைப்படுத்துவதோடு 10-க்கும் மேற்பட்ட நபர்களின் பற்களை கட்டிங் பிளேயர் வைத்து பிடுங்கியதாகப் புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். சர்ச்சையில் சிக்கிய உதவி காவல் கண்காணிப்பாளர்(Assistant Superintendent of Police) பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி சங்கர், சுபாஷ், வெங்கடேஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணை அதிகாரி சபீர் ஆலம் முன்பு நேரில் ஆஜராகினர். இதில் லட்சுமி சங்கர் என்பவர் பல்வீர் சிங்கிற்கு எதிராக எவ்வித புகாரும் விசாரணை அதிகாரியிடம் கூறவில்லை என தகவல் வெளியானது.

இதையும் படிங்க: ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரத்தில் நடப்பது என்ன? - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்!

இதனிடையே, புதன்கிழமை(மார்ச் 29) அன்று சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஏஎஸ்பி பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக் கைதிகளிடம் மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு ஒருபோதும் அனுமதிக்காது" எனக் கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சூர்யா என்ற இளைஞர் புதன்கிழமை மாலை சேரன்மாகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது,"நான் கீழே விழுந்ததில் தான் பல் உடைந்தது. நடந்தது அனைத்தையும் சார் ஆட்சியரிடம் கூறிவிட்டேன்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இளைஞர் சூர்யாவின் இந்த பேச்சு ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், நேற்று(மார்ச் 29) நேதாஜி சுபாஷ் சேனைத் தலைவரும், வழக்கறிஞருமான மகாராஜன் மற்றும் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து, மாரி, செல்லப்பா, சுபாஷ், ரூபன், மாரி ஆகியோர் சேரன்மாகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது சம்மன் அனுப்பினால் மட்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சார் ஆட்சியர் தரப்பில் கூறியதாகத் தெரிகிறது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஜன் "சாத்தான்குளம் சம்பவத்தைப் போன்ற கொடுமை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க:சமையல் செய்யாததால் ஆத்திரம்.. மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.