சென்னை ஐஐடி வளாகத்தில் பிடிபட்ட மலேசியன் மலைப்பாம்பு.. கிண்டி பாம்புப் பண்ணையில் இருந்து தப்பிய பாம்பு என தகவல்!
சென்னை: கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஐஐடி வளாகத்தில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை அடர்ந்த பகுதிகளுக்கு நடுவே பதுங்கியிருந்த மலைப்பாம்பை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாகப் பிடித்தனர்.
இதனையடுத்து பிடித்த மலைப்பாம்பைக் கிண்டி சிறுவர் பூங்காவில் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஏற்கனவே கிண்டி சிறுவர் பூங்காவில் இரண்டு மலைப் பாம்புகள் இருப்பதாகவும் இதையும் அதோடு இனைத்து மூன்று பாம்புகளாகப் பராமரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி பாம்பு பன்னையிலிருந்து தப்பிய மலைப்பாம்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வகை மலை பம்பு உலகிலேயே நீளமாக வளரக்கூடிய மலேசியன் மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. தற்போது பிடிபட்ட பாம்பு 12 அடி நீளமும் 30 கிலோ எடை கொண்டது எனத் தெரிவித்தனர்.
மேலும் இந்த வகை பாம்புகள் தெற்காசியக் காடுகள் பகுதியில் வளரக்கூடியது. குறிப்பாக மலேசியன் காட்டுப்பகுதியில் அதிகளவில் வளரக்கூடிய இந்த பாம்புகள் சுமார் 22 அடி 75 கிலோ வரை வளரக்கூடியவை எனத் தெரிவித்தனர்.