தலையில் தேங்காய் உடைத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்

By

Published : Jul 30, 2023, 6:06 PM IST

thumbnail

கிருஷ்ணகிரி: தென்னை மற்றும் பனையில் இருந்து கள் விற்க அனுமதி அளிக்க வேண்டும், மஞ்சள் குவிண்டாலுக்கு 15 ஆயிரம் ருபாய் விலை நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  26 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தலையில் தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 18 மாவட்டங்களில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து, குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.

தமிழ்நாடு அரசு, தென்னை மற்றும் பனையில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிப்பதோடு பச்சை தேங்காயை டன் ஒன்றுக்கு ரூ. 40,000க்கு கொள்முதல் செய்திடவேண்டும், உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பென்னாங்கூர் பகுதியில் விவசாயிகள்  26 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் நிறைவு நாளான இன்று மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள்  தலை மேல் தேங்காயை உடைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு தெரிவித்து அக்கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.