ETV Bharat / state

தலைமை ஆசிரியர் தம்பதி கொலை வழக்கு.. ஒருவர் கைது! கடன் கேட்டு தராத ஆத்திரத்தில் கொலையா? போலீசார் விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 7:17 AM IST

villupuram murder case
விழுப்புரம் கொலை

villupuram murder case: வளவனூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விழுப்புரம்: வளவனூர் கே.எம்.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 68). இவரது மனைவி உமாதேவி (வயது 61). இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தம்பதியினர் கடந்த இரு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களைத் தேடி அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது தம்பதியினர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வளவனூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த இருவரின் உடலிலும் காயங்கள் ஏதுமில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த தம்பதியின் வீட்டில் வாடகைக்கு இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர், ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியிடம் இருந்து 21 லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பி அளிக்காத நபர் தலைமறைவாகி உள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அதேநேரம் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதியான தகவல்கள் கூற முடியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வீட்டில் தனியாக இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் இறந்திருப்பதைக் கண்டு பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியினர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், பணத்திற்காக யாராவது தனிமையில் இருப்பதை சாதகமாக கொண்டு வயதான தம்பதியினரைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் தம்பதியின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்புகளின் படி, வளவனூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்ற இளைஞர் கடன் பிரச்சினையால் தம்பதியிடம் பணம் கேட்டபோது அவர்கள் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புருஷோத்தமன், தம்பதியினர் தனிமையில் இருப்பதைப் பயன்படுத்தி கடந்த 19ஆம் தேதி தம்பதியின் வீட்டிற்கு சென்று இருவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றது தெரியவந்ததாக போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இருவரை கொலை செய்து விட்டு புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமனை போலீசார் பிடித்து கைது செய்தனர். புருஷோத்தமனிடம் இருந்து 20 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்; வேறு மாநிலங்களில் வேண்டுமானால் இருக்கட்டும்: ப.சிதம்பரம் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.