ETV Bharat / state

போலி மருத்துவருக்கு மீண்டும் கிளினிக் நடத்த சான்றிதழ் - திருப்பத்தூரில் தான் அவலம்!

author img

By

Published : Jul 24, 2023, 12:03 PM IST

போலி மருத்துவருக்கு மீண்டும் கிளினிக் நடத்த சான்றிதழ் - திருப்பத்தூரில் தான் இந்த ருசிகரம்!
போலி மருத்துவருக்கு மீண்டும் கிளினிக் நடத்த சான்றிதழ் - திருப்பத்தூரில் தான் இந்த ருசிகரம்!

மருத்துவ இணை இயக்குநரால் நேரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவருக்கு மீண்டும் கிளினிக் நடத்த அதே மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணி இணை இயக்குநர், சான்றிதழ் வழங்கிய சம்பவம், திருப்பத்தூரில் அரங்கேறி உள்ளது.

திருப்பத்தூர்: மருத்துவ இணை இயக்குநரால் நேரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவருக்கு மீண்டும் கிளினிக் நடத்த அதே மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணி இணை இயக்குநர், சான்றிதழ் வழங்கிய சம்பவம், திருப்பத்தூரில் நடைபெற்று உள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநராக மருத்துவர் மாரிமுத்து பதவியேற்று உள்ள நிலையில், திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள போலி மருத்துவர்களை களை எடுக்கும் பணியில் அதிரடியாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி, திருப்பத்தூர் அடுத்த தாமலேரி முத்தூர் பகுதியில் சம்பத்(35) என்பவர், எம்பிபிஎஸ் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு மருத்துவம் செய்வதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, சம்பத் நடத்தி வரும் கிளினிக்கில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது சுமார் 20 பேருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவருடைய கிளினிக்கில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, அப்போது மருத்துவ இணை இயக்குநர் மாரிமுத்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பத்தை விசாரணைக்காக, ஜோலார்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இவர் ஏற்கனவே வீட்டில் மருத்துவம் பார்த்துக் கொண்டு வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு, சம்பத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து மீண்டும் கிளினிக் நடத்த சான்றிதழ் வழங்கியது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவத் துறையில் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் குற்றங்களைத் தடுக்க வேண்டிய மருத்துவ இணை இயக்குனரே போலி மருத்துவருக்கு கிளினிக் நடத்த அனுமதி வழங்கி உள்ளதாக எழுந்து வரும் புகார், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

10வது படித்துவிட்டு 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டரை, தருமபுரியில் போலீசார் கைது செய்து உள்ளனர். தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்குப் புகார் வந்தன. இதன் அடிப்படையில் போலி மருத்துவ ஒழிப்பு குழுவினருடன் கிருஷ்ணாபுரம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்து காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் நாயக்கன் கொட்டாய் பகுதிக்குச் சென்றனர்.

அங்கு மருத்துவமனை நடத்தி வந்த கண்ணன் என்பவரிடம் உரிமை மற்றும் ஆவணங்கள் குறித்து சோதனை மேற்கொண்டதில் மருத்துவராக இருந்த கண்ணன்(60), பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து விட்டுக் கடந்த பத்தாண்டுகளாக இந்த பகுதியில் மருத்துவம் பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது தந்தை ஹோமியோ மருத்துவம் பார்த்து வந்தபோது, அதனை உடனிருந்து கற்றுக்கொண்டு தனது தந்தை உயிரிழந்த பின்னர், கடந்த பத்தாண்டுகளாக நோயாளிகளுக்கு ஊசி போட்டும் மருந்து மாத்திரைகளும் வழங்கி வந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கிருஷ்ணாபுரம் போலீசார் கண்ணனைக் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஊசிகள், மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: என்ஐஏ சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் - எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.