ETV Bharat / state

குடிநீர் தொட்டியில் விஷமா? திருநெல்வேலி அருகே பரபரப்பு..! சுகாதாரத்துறை விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 5:36 PM IST

near Tirunelveli health department officials Investigation the Thulukkarpatti water tank issue
குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டதாக புகார்

Tirunelveli Water Tank Issue: திருநெல்வேலி மாவட்டத்தின் துலுக்கர்பட்டி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி தண்ணீரில் அதிகளவு மருந்து வாடை அடித்ததன் காரணத்தால் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டதாக புகார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், தளபதி சமுத்திரம் அடுத்த துலுக்கர்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேல்நிலை தீர்த்தேக்க தொட்டி மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இன்று காலை வழக்கம்போல் ஊர் மக்கள் குடிநீர் பிடித்தபோது தண்ணீரில் அதிகமான மருந்து வாசனை வீசியுள்ளது.

இதையடுத்து பொதுமக்களில் ஒரு சிலர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி குடிநீரை சோதனை செய்தனர். அப்போதும் அதிகமான மருந்து வாசனை வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையிலான சுகாதாரத் துறையினர் விரைந்து வந்து ஆய்வுக்கு குடிநீர் மாதிரியை எடுத்து சென்றனர். அதேசமயம் கடந்த இரு நாட்களாக தண்ணீரை பயன்படுத்திய அப்பகுதியில் உள்ள மக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

எனவே, அதில் உண்மையாகவே பூச்சி மருந்தை விஷமிகள் யாரேனும் கலந்தனரா அல்லது கிருமி நாசினி பவுடர் அதிகம் கலந்ததால் வாசனை வந்ததா என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கைவயல் கிராமத்தில் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "குடிக்க தண்ணீர் இல்லை, குழந்தைக்கு பால் இல்லை" - தத்தளிக்கும் புளியந்தோப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.