ETV Bharat / state

கரும்பு விவசாயிகளின் அவல நிலை... 200ஆவது நாளை எட்டிய போராட்டம்... கண்டுகொள்ளாத அரசு..

author img

By

Published : Jun 18, 2023, 7:13 AM IST

Sugarcane Farmers
200வது நாள் போராட்டம்

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தின் 200வது நாளான நேற்று கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கரும்பு விவசாயிகளின் அவல நிலை... 200ஆவது நாளை எட்டிய போராட்டம்... கண்டுகொள்ளாத அரசு..

கும்பகோணம்: திருமண்டங்குடி அருகே உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில், சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையாக மொத்தம் ரூபாய் 153 கோடி அளவிற்கு தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது. இதுதவிர்த்து விவசாயிகளின் பெயரில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூபாய் 150 கோடி ரூபாய் அளவிற்கு ஆலை நிர்வாகம் சார்பில் கடன் பெறப்பட்டு, அதனைத் திரும்ப செலுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டு ஆலை மூடும் அளவிற்குத் தள்ளப்பட்டுவிட்டது. தற்போது ஆலை மூடிய நிலையில் உள்ளது. மேலும் ஆலை வாங்கிய கடன் கரும்பு விவசாயிகள் மீது விழுந்து அதற்கான வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் தாண்டி ஆலை நிர்வாகம் முன்பு வழங்கிய கரும்பு தொகையில், பயிர் கடனுக்குரிய தொகையை விவசாயிகளிடம் இருந்து பிடித்தம் செய்து அதனை வங்கியில் திரும்பி செலுத்தாததால், அந்த தொகையும் வங்கியில் விவசாயிகள் பெயரில் நிலுவைத் தொகையாக உள்ளது.

இந்நிலையில் திருஆரூரான் சர்க்கரை ஆலையினை கடந்த ஆண்டு கால்ஸ் டிஸ்லரீஸ் என்ற மற்றொரு தனியார் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம் விவசாயிகளின் கடன் தொகையினை திரும்ப செலுத்தவும், வங்கிக் கடனை ஏற்கவும் மறுத்துவிட்டது. ஆகவே, இதனைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் கடந்தாண்டு நவம்பர் 30ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் விவசாயிகள் ஆலையின் முன்பே உண்டு, உறங்கி பல இன்னல்களை சந்தித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு தொடர் காத்திருப்பு போராட்டமாக மாற்றி போராட்டத்தை தொடர்ந்தனர். இப்போராட்டம் பின் வலுப்பெற்று நேற்றுடன் 200 நாளை நிறைவு செய்கிறது. கரும்பு விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து 200 நாட்கள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதை அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.

போராட்டத்தின் 200வது நாளான நேற்று கும்பகோணம் காந்தி பூங்காவில், மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் மாநிலச் செயலாளர் தங்க காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளரும், அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவருமான டி. ரவீந்திரன் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

அப்போது, திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பிற்கான நிலுவைத்தொகையினை உடனே வழங்க வேண்டும்.மேலும் விவசாயிகளின் பெயரில் ஆலை நிர்வாகம் பெற்ற வங்கிக் கடனை வட்டியும் முதலுமாக செலுத்தவேண்டும் என்றும் பயிர் கடனுக்காக பிடித்தம் செய்த நிலுவைத் தொகையினையும் ஆலை நிர்வாகம் உடனடியாக வங்கிக்கு செலுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க:பெற்றோர்களே உஷார்.. கல்வி உதவித் தொகை என்ற பெயரில் மோசடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.