ETV Bharat / state

தஞ்சையில் மழை சேதங்களை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு.. 87 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாதிப்பு என தகவல்.!

author img

By

Published : Feb 5, 2023, 5:05 PM IST

சக்கரபாணி
சக்கரபாணி

தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி, டெல்டா மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பாதிப்பு என தகவல் தெரிவித்தார்.

தஞ்சையில் மழை சேதங்களை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு கன மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன. இந்த சேதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர் குழுவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உத்தரவிட்டார்.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வேளாண்மைத் துறை அலுவலர்கள் தஞ்சையை அடுத்த அம்மாபேட்டையில் புத்தூர், உக்கடை நெல் கொள்முதல் நிலையம், உள்ளிட்ட இடங்களில் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "டெல்டா மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று கணக்கெடுக்கப்பட்டு, அதனை முதலமைச்சர் தலைமையில் கூட்டம் அமைத்து ஆலோசனை நடத்தப்படும். பின்னர் தமிழக முதல்வர் நிவாரணத் தொகையை அறிவிப்பார்.

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுள்ளனர். கடந்தாண்டு மத்திய அரசு 17 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்தி வழங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி 22 சதவீதம் ஈரப்பதம் தளர்த்தி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டு 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த மழையால் அது குறைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நெல், உளுந்து, கடலை பயிரிடப்பட்ட 18 ஆயிரத்து 374 ஹெக்டேர் விளைச்சல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தைப்பூசம்: பழனி முருகன் கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.